கலிபோர்னியா: ‘கூகுள் வாலெட் அப்ளிகேஷன்’ என்ற கைபேசி இன்புட்/அவுட்புட் (I/O) டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம்.
தொழில்நுட்ப உலகின் சாம்ராட்டான கூகுள் நிறுவனம் ஆண்டுதோறும் இன்புட்/அவுட்புட் எனப்படும் I/O டெவலப்பர் மாநாட்டினை நடத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக இணைய வழியில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்த ஆண்டு மீண்டும் நேரடியாக நடைபெற்றது. இருந்தாலும் இதில் குறைவான பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. கடந்த 2008 முதல் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் தங்களது தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப அப்டேட்களை கூகுள் அறிவிக்கும். அதோடு புதிய அறிவிப்புகள் சிலவும் அறிவிக்கப்படும். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன.
அதில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் அமைந்துள்ளது ‘கூகுள் வாலெட் அப்ளிகேஷன்’. அதன் பெயருக்கு ஏற்ற வகையில் இந்த செயலியின் செயல்பாடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. ஏன் நமது வாலெட்களும் டிஜிட்டல் வடிவில் மாறக்கூடாது என கூகுள் யோசித்ததன் வெளிப்பாடு தான் இது.
வழக்கமாக நம் கைகளில் இருக்கும் வாலெட்டை கொண்டு என்னென்ன செய்வோமோ அவை அனைத்தையும் இந்த செயலியின் துணை கொண்டு செய்யலாம் என கூகுள் தெரிவித்துள்ளது. பிஸிக்கல் ஐட்டங்களின் டிஜிட்டல் வெர்ஷனை இதில் பயன்படுத்த முடியுமாம்.
வங்கிகளின் ஏடிஎம் கார்டுகள் தொடங்கி அடையாள அட்டைகளையும் டிஜிட்டல் வடிவில் இதில் சேமித்து (Save) வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் மேற்கொள்ளலாம் எனவும் தெரிகிறது. அதோடு போர்டிங் பாஸ் மாதிரியானவற்றை இதில் சேமித்து வைப்பதன் மூலம் புறப்பாடு தொடர்பான நோட்டிபிகேஷனையும் இந்த செயலி கொடுக்கும். முக்கியமாக இது கூகுள் நிறுவனத்தின் மற்ற செயலிகளுடனும் இணைந்து இயங்கும் எனத் தெரிகிறது. உதாரணமாக இந்த வாலெட் செயலியை பயன்படுத்தி பேருந்தில் டிக்கெட் எடுத்து செல்லும் பயனருக்கு அவர் போக வேண்டிய லொகேஷனை கூகுள் மேப் கொண்டும் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சுமார் 40 நாடுகளில் இந்த செயலி அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.