தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தொடர்ந்து சர்வதேச சந்தை, இந்திய சந்தை என இரண்டிலும் தடுமாறி வரும் நிலையில், இன்றும் சரிவு தொடருமா? இன்று வாங்கலாமா? வேண்டாமா?
சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் என்ன?
கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? முக்கிய லெவல்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
3 மாத சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா?
ஏன் சரிவு?
தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதே பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதுவும் தங்கம் விலையானது சரிவினைக் காண வழிவகுத்துள்ளது.
பணவீக்க அச்சம்
சர்வதேச அளவில் பணவீக்கம் என்பது மிகப்பெரிய அச்சமாக இருந்து வருகின்றது. உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றமானது நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே தான் உள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் சப்ளை சங்கிலியில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலைவாசியானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது தொடந்து பணவீக்கத்தினை ஊக்கப்படுத்தலாம். இதனால் மேற்கொண்டு தங்கம் விலையானது அதிகரிக்கலாம்.
தற்போது வரையில் உச்சம்
அமெரிக்காவின் ஏப்ரல் மாதத்திற்காக நுகர்வோர் விலை குறியீடு ஏப்ரலில் 8.3% ஆக அதிகரித்துள்ளது. எனினும் இது மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது குறைந்திருந்தாலும், தற்போது வரையிலும் அதிகரித்தே காணப்படுகின்றது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் சற்றே சரிந்துள்ளது. எனினும் தற்போது வரையில் உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இது கவலையளிக்கும் ஒரு விஷயம் என கூறியுள்ளார்.
கவனிக்க வேண்டிய காரணிகள்
இதற்கிடையில் தான் 22 வருடத்தில் மிகப்பெரிய அளவில் கடந்த வாரத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது. எனினும் தற்போது வரையிலும் பணவீக்கம் என்பது மீண்டும் உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இது வட்டி விகிதத்தினை மீண்டும் அதிகரிக்க தூண்டலாம். தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், சீனாவில் நிலவி வரும் அசாதாரண நிலை, உக்ரைன் – ரஷ்யா பதற்றம் என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் முக்கிய பங்கு வகிக்கலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 4.40 டாலர்கள் குறைந்து, 1849.30 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கிழாக தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
வெள்ளி விலையும் 1% மேலாக குறைந்தே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 1.02% குறைந்து, 21,354 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 43 ரூபாய் குறைந்து, 50,865 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கேப் அப் ஆகி மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் தற்போது தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது கிட்டத்தட்ட 1% குறைந்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 452 ரூபாய் குறைந்து, 60,291 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக நீண்டகால நோக்கில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 4,835 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 384 ரூபாய் அதிகரித்து, 38,680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 53 ரூபாய் அதிகரித்து, 5,275 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 424 ரூபாய் அதிகரித்து, 42,200 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,750 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலையை போல, ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 65 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 650 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 65,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று குறைந்து காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும்.
gold price on 12th may, 2022:Gold price today also struggling, is it a right time to buy?
Gold prices have been declining in both the international and Indian markets. However, the price of jewelry gold continues to rise.