சென்னை:
சென்னை ராயப்பேட்டை சித்தி முத்தி விநாயகர் கோவில், பெரிய பாளையத்து அம்மன் கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த மானிய கோரிக்கையின் போது 165 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன, அதில் நகர்புறங்களில் அமைந்துள்ள 200 சிறிய கோவில்களில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ராயப்பேட்டை பகுதியில் உள்ள பழைமையான சித்தி முத்தி விநாயகர் கோவில், பெரிய பாளையத்து அம்மன் கோவில்களில் ஆய்வுபணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த கோவில்களை பழைமை மாறமால் புதுப்பிக்கவும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு திட்டங்கள் தயார் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
அதிகாரிகளை ஆய்வு செய்ய மறுக்கப்பட்டு உள்ளதை பதிவு செய்துள்ளோம். சட்ட பூர்வமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆணையருடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.
பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு பயத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படவில்லை. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதால் ஆதீனங்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டது. எதிர்காலங்களில் பட்டின பிரவேசம் போன்ற நிகழ்வுகளுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.
பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு அனுமதி அளித்ததன் மூலம் எதிர்காலத்தில் இந்து அமைப்புகள் அரசுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவரது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். ஆத்திகர், நாத்திகர் என அனைவருக்கும் சமமான அரசாக இந்த அரசு உள்ளது.
ஆர்.ஏ.புரம் பகுதியில் தனி நபர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்து உள்ளோம். கோவில் நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.