571 AYUSH courses seats vacant in Tamilnadu private colleges: இந்திய மருத்துவமுறை படிப்புகளான ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படிப்புகளில் நடப்பு ஆண்டில் 571 இடங்கள் காலியாக உள்ளதாக மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ் படிப்புகளைத் தொடர்ந்து இந்திய மருத்துவமுறை படிப்புகளான ஆயுஷ் எனப்படும் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி போன்ற படிப்புகளில் சேர்க்கைப் பெற கடந்த 2019 முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேநேரம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான சேர்க்கை 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறுகிறது.
இந்தநிலையில், இந்த ஆண்டிற்கான ஆயுஷ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரம்பியுள்ளன. ஆனால், மாணவர் சேர்க்கை செவ்வாய் அன்று நிறைவடைந்த நிலையில், சுயநிதி கல்லூரிகளில் சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி ஆகிய படிப்புகளில் 571 இடங்கள் காலியாக உள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில், நீட் தேர்வில் போதுமான மாணவர்கள் தேர்ச்சி பெறாததால், அரசு மருத்துவக் கல்லூரிகளில், குறிப்பாக யுனானியில், இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றதால் யுனானி இடங்கள் நிரம்பியுள்ளன. ஆனால். யுனானி படிப்புகளில் சேருவதற்கு முன்னர் மாணவர் அரபு மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதாலும், மேலும் நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதாலும், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படியுங்கள்: TNPSC: குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. டவுன்லோடு செய்வது எப்படி?
சித்தா மற்றும் ஆயுர்வேத படிப்புகளில் சேரும் மாணவர்கள் முறையே, சேர்க்கைப் பெற்ற ஒரு வருடத்திற்குள் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் யுனானி படிப்பில் மாணவர்கள் அரபு மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு, யுனானியில் இளங்கலை மாணவர்களுக்கான 51 அரசு கல்லூரி இடங்களும் நிரம்பியுள்ளன. அதேபோல் அரசு கல்லூரிகளில் உள்ள இடங்களில் சித்தாவில் 136, ஹோமியோபதியில் 42 மற்றும் ஆயுர்வேதத்தில் 51 என மொத்தம் 229 இடங்களும் நிரம்பியுள்ளன. இதில் 50 அரசு கல்லூரி இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யுனானி படிப்புகளை வழங்கும் 36 சுயநிதிக் கல்லூரிகளில் 1600 இடங்களில் 571 இடங்கள் காலியாக உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 253 இடங்களில் 72 இடங்களும், அரசு ஒதுக்கீட்டில் 935 இடங்களில் 202 இடங்களும், மேலாண்மை ஒதுக்கீட்டில் 544 இடங்களில் 297 இடங்களும் காலியாக உள்ளன. சுயநிதி கல்லூரிகளில் கட்டணம் அதிகமாக உள்ளதால் அனைத்து இடங்களும் நிரம்ப சிறிது காலம் ஆகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.