அமிர்தசரஸ் : இந்தியாவின் முதல் விடுதலைப் போரில் கொல்லப்பட்ட இந்திய ராணுவத்தினர், 282 பேரின் எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சியில், ராணுவத்தினரின் துப்பாக்கி தோட்டாக்களில், பன்றி மற்றும் மாட்டிறைச்சியில் தயாரிக்கப்படும் பசை பயன்படுத்தப்பட்டது. ஹிந்து மத கோட்பாடுகளுக்கு எதிரான இத்தகைய பயன்பாட்டை எதிர்த்து, 1857ல் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இந்திய ராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களை சுட்டுத் தள்ளிய ஆங்கிலேயர்கள், கிளர்ச்சியை ஒடுக்கினர். இதை ‘சிப்பாய் கலகம்’ என்றும் ‘இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்’ என்றும் வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, 2014ல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போது, 282 பேரின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. ”அஜ்நாலா என்ற இடத்தில் ஒரு கிணற்றில் கிடைத்த இந்த எலும்புக் கூடுகளை ஆய்வு செய்ததில், அவை சிப்பாய் கலகத்தில் கொல்லப்பட்ட இந்திய ராணுவத்தினருடையவை என்பது தற்போது தெரியவந்துள்ளது,” என, பஞ்சாப் பல்கலை., அகழ்வாராய்ச்சி துறை உதவிப் பேராசிரியர் ஜே.எஸ்.ஷெராவத் தெரிவித்துள்ளார்.
அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள், பதக்கங்கள் மற்றும் மரபணு மாதிரிகளின் ஆய்வுகள் அனைத்தும், எலும்புக் கூடுகள் இறந்த வீரர்களுடையது என்பதை நிரூபிப்பதாக ஷெராவத் கூறியுள்ளார்.
Advertisement