சி.எஸ்.கே பூசல்: மருத்துவ விடுப்பில் ஜடேஜா?

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி ஆல்ரவுண்டர் வீரராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா. ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் இவர், ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியால் ரூ.16 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். பின்னர் சென்னை அணியின் புதிய கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டார்.

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 26ம் தேதி இந்திய மண்ணில் கோலாகலமாக தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை வழிநடத்திய ஜடேஜா சற்று பதற்றமாகவே காணப்பட்டார். இதுவரை உள்ளூர் அணிக்கு கூட கேப்டனாக செயல்படாத அவரால் சென்னையை அணி வெற்றி நோக்கி வழிநடத்துவதில் திணறி வந்தார். சென்னை அணி தொடரில் 4 தொடர் தோல்விகளை சந்தித்தது. பின்னர் பெங்களூருவை பந்தாடி வெற்றியை பதிவு செய்தது. இதன்பிறகு தான் ஜடேஜாவுக்கு பெருமூச்சு கிட்டியது.

தொடர்ந்து நடந்த ஆட்டங்களில் வெற்றி, தோல்வி என மாறி மாறி கண்டது சென்னை அணி. இதனால், கேப்டன் ஜடேஜா மீது இருந்த அழுத்தம் அதிகரிக்கவே அவர் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதில் அணியின் நீண்ட கால கேப்டனாக செயல்பட்ட எம்எஸ் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சென்னை அணி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ரவீந்திர ஜடேஜா தனது விளையாட்டில் அதிக கவனம் செலுத்தவும், சிஎஸ்கேயை வழிநடத்தவும் எம்எஸ் தோனியிடம் கேட்டுக்கொண்டார்.” என்று குறிப்பிட்டு இருந்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பிறகு, பேட்டியளித்த கேப்டன் தோனி, கேப்டன் பதவியின் அழுத்தம் ஜடேஜாவின் ஆட்டத்தை எவ்வாறு பாதிக்கிறது என்று பகிரங்கமாக பேசினார். “கடந்த சீசனில் ஜடேஜா இந்த ஆண்டு கேப்டனாக இருப்பார் என்று எனக்கு தெரியும் என்று நினைக்கிறேன். முதல் இரண்டு ஆட்டங்களுக்கு, நான் அவருடைய வேலையை மேற்பார்வையிட்டேன். அதன்பிறகு, அவரை முழுமையாக செயல்பட அனுமதித்தேன். நீங்கள் கேப்டனாகிவிட்டால், நிறைய கோரிக்கைகள் வரும் என்று அர்த்தம். கேப்டன்சி அவரது தயாரிப்பு மற்றும் செயல்திறனைச் சுமக்கச் செய்ததாக நான் நினைக்கிறேன்.” என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையில், கடந்த புதன்கிழமை சென்னை அணியின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஜடேஜாவின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடரவில்லை என்று கூறப்பட்டு பெரும் சர்ச்சை வெடித்தது. மேலும், அவருக்கும் உரிமையாளருக்கும் இடையே பிளவு உள்ளது என்பது போன்ற வதந்திகளும் சமூக வலைதள பக்கங்களில் பேசப்பட்டது. சென்னை அணியில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத வீரர்கள் சிலர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில், கேப்டன் மாற்றம் கையாளப்பட்ட விதத்தில் ஜடேஜா மகிழ்ச்சியடையவில்லை. இந்த செயல்முறை வெளிப்படைத்தன்மை இல்லாததாக அவர் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சென்னை அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ரவீந்திர ஜடேஜாவின் விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்படவில்லை எனவும் மருத்துவ அறிவுரையின்படி அவர் ஓய்வு எடுக்க இருப்பதால் தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் அளித்துள்ள பேட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஐடேஜா, விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்றும் இது முற்றிலும் “மருத்துவ ஆலோசனையின் பேரில்” செய்யப்பட்டது. என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காசி விஸ்வநாதன் அந்த பேட்டியில், “சமூக ஊடகங்கள், நான் எதையும் பின்பற்றுவதில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்குத் தெரியாது. நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது என்னவென்றால், நிர்வாகத் தரப்பில் இருந்து, எந்த பிரச்சனையும் இல்லை. சமூக ஊடகங்களில் என்ன இருந்தாலும், எனக்குத் தெரியாது. சிஎஸ்கேவின் எதிர்காலத்திற்கான திட்டத்தில் ஜடேஜா உறுதியாக இருக்கிறார்.

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தின் போது ஜட்டுவுக்கு காயம் ஏற்பட்டது. அதன் பிறகு டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. மருத்துவ ஆலோசனையின் பேரில், அவர் இந்த ஐபிஎல்லில் மேற்கொண்டு பங்கேற்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டு, அவர் வீடு திரும்புகிறார். இதனால் தான் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பல சிறந்த இந்திய வீரர்களும் இந்த ஐபிஎல்லில் கடினமான காலகட்டத்தை கடந்து வருகிறார்கள். அவர்களின் ஃபார்ம் தற்காலிகமானது. கிளாஸ் நிரந்தரமானது. ஒருவேளை, கேப்டன் பதவி அவருக்கு சற்று கடினமானதாக இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் ஜடேஜாவை இழக்க விரும்பவில்லை, ”என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா நடப்பு ஐபிஎல் தொடருக்கு வரும் போது, உலகின் முன்னணி ஆல்ரவுண்டராக வலம் வரும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸுக்கு இணையான சராசரியை கொண்டிருந்தார். ஆனால், நடப்பு தொடரில் 10 ஆட்டங்களில் விளையாடிய அவர் 116 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை மட்டும் எடுத்தது கடுமையான ஃபார்ம் சரிவை சந்தித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.