சோளிங்கரில் பி.இ பட்டம் படிக்கும் வாலிபரை சட்ட விரோத காவலில் வைத்த எஸ்.ஐ உட்பட 3 காவலர்களை வேலூர் டிஐஜி பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, பெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். நெல் வாங்கிவிற்கும் வியாபாரியான இவருக்கு அரிகிருஷ்ணன்(20) என்ற மகன் இருக்கிறார். அவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. 4ஆம் ஆண்டு படித்து வருகிறார். சோளிங்கர் அடுத்த ஜோதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜனிடம் ஆறுமுகம் நெல் வாங்கியபோது ரூ.25 ஆயிரம் பாக்கி வைத்துள்ளார். இதனால் நடராஜன், ஆறுமுகத்திடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆறுமுகமும் பணம் வந்தவுடன் தந்து விடுகிறேன் எனக் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி விடியற்காலை 4.30 மணியளவில் நடராஜன் மற்றும் 2 காவலர்கள் ஆறுமுகத்தின் வீட்டினுள் நுழைந்து ஆறுமுகத்தின் மகன் அரிகிருஷ்ணனிடம் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு அரிகிருஷ்ணன், தன் தந்தை ஆறுமுகம் வெளியே சென்றுள்ளார் எனவும், அவர் வந்தவுடன் வருமாறும் கூறியுள்ளார். ஆனால் ஆறுமுகம் கொடுக்க வேண்டிய பாக்கி பணத்தை இப்போதே கொடுக்க வேண்டும் என மிரட்டி பீரோவைத் திறந்து பார்த்துள்ளனர்.
பணம் எதுவும் இல்லாததால் நடராஜனின் காரில் அரிகிருஷ்ணனை அழைத்துக்கொண்டு சோளிங்கர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். சோளிங்கர் காவல் உதவி ஆய்வாளராக உள்ள பசலைராஜிடம், இவனை காவல்நிலையத்தில் வைத்தால்தான் ஆறுமுகம் பணம் கொடுப்பார் என நடராஜன் தெரிவித்துள்ளார். அதற்கு எஸ்.ஐ பசலைராஜ் பணத்தை இன்றே வாங்கிவிடலாம் அல்லது அரிகிருஷ்ணன் மீது பொய்வழக்கு போட்டு ரிமாண்ட் செய்துவிடலாம் எனத் தெரிவித்துள்ளார். பின்னர் எஸ்.ஐ பசலைராஜ், அரிகிருஷ்ணனின் செல்போனை வாங்கி ஆறுமுகத்திற்கு போன்செய்து நடராஜனுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு அரிகிருஷ்ணனை அழைத்து செல்லும்படி கூறியுள்ளார்.
தொடர்ந்து எஸ்.ஐ பசலைராஜ், அரிகிருஷ்ணனை சோளிங்கரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் தங்க வைத்துள்ளார். மீண்டும் மதியம் சோளிங்கர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்பொழுது அங்கிருந்த காவலர் ஒருவர் நடராஜனுக்கு உன் தந்தை ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டுமென அரிகிருஷ்ணனை மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளார். பின்னர் அரிகிருஷ்ணனை அங்கிருந்து அனுப்பி உள்ளனர்.
இதுபற்றி தகவலறிந்த வடக்கு மண்டல ஐ.ஜி பிரேம் ஆனந்த்சின்கா உத்தரவின்பேரில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி தீபாசத்யன் விசாரணைசெய்து அரிகிருஷ்ணனை சட்ட விரோத காவலில் வைத்த சோளிங்கர் எஸ்.ஐ பசலைராஜ், அதே காவல்நிலையத்தைச் சேர்ந்த பரத் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகிய 3 காவலர்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு டிரான்ஸ்ஃபர் செய்து உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM