மதுரை பாலமேடு அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் ஊற்றி பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள பாரைப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் வீடுகள் கட்டியுள்ள நபர்களுக்கு வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இன்று அதிகாரிகள், வருவாய்துறையினர், காவல்துறையினர் என அனைவரும் ஜேசிபி இயந்திரத்துடன் வீடுகளை இடிக்க சென்றனர்.
அப்போது வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண் சின்னம்மாள் என்பவர் திடீரென பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், பெட்ரோல் கேனை கைப்பற்றி பெண் மீது தண்ணீர் ஊற்றி அசம்பாவித சம்பவம் நடைபெறாதவாறு தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அதிகாரிகள் பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசப்படுத்தினர். ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற முன்வர வேண்டும் என கூறி, அதிகாரிகளுடன் சிறிது நேரம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் மீண்டும் முறையாக அளவீடு செய்து பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM