டான்செட் தேர்வு: வரும் சனிக்கிழமை (14ந்தேதி) அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (மே 14 ஆம் தேதி) டான்செட் தேர்வு நடைபெற உள்ளதால், அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்ட பல்கலைக் கழகங்களின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க, டான்செட் (TANCET) எனும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம். அதன்படி நடப்பாண்டில் டான்செட் தேர்வை ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மே 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. முதுகலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே 15 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.

இதையொட்டி,  தமிழகத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை)  அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர் கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். அதில், அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான டான்செட் தேர்வு நாளை மறுநாள்  நடைபெறுவதால் அதில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,அண்ணா பல்கலைக்கழகத்தின் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதள பக்கத்தில் டான்செட் 2022 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.