"தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை கோர சட்ட உரிமை இல்லை" – உயர்நீதிமன்றம்

தண்டனை கைதிகள், முன்கூட்டியே விடுதலை கோர சட்ட உரிமையோ அல்லது அடிப்படை உரிமையோ இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தனது மகன் ஹரிஹரனை முன்கூட்டியே விடுவிக்ககோரி அவரது தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தண்டனை கைதிகள் 1,650 பேரை விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில் தனது மகனை விடுவிக்க அரசு மறுத்து விட்டதாக கூறியிருந்தார்.
image
இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஏ ஏ நக்கீரன் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, “இரண்டு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாலும், சிறையிலும் நன்னடத்தை விதிகளை ஹரிஹரன் கடைபிடிக்காததாலும் அவரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது” என வாதிட்டார்.
இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தண்டனை கைதிகள், முன்கூட்டியே விடுதலை கோர சட்ட ரீதியாகவோ, அடிப்படை ரீதியாகவோ உரிமையில்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த கருத்து, மற்ற வழக்குகளில் சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிப்பதற்கு எந்த தடையும் இல்லை என நீதிபதிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.