சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
“அசானி” புயல் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது.
இது இன்று காலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினத்திற்கு மேற்கே நிலவியது. இது இன்று காலை 8.30 மணி அளவில் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலவுகிறது. இது படிப்படியாக மேலும் வலுவிழக்கக்கூடும்.
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (13ந்தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14ந்தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.