சென்னை: தமிழ் வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும், உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கும், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், நீதிபதிகள் நியமனம், தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளைகள் அமைத்தல், தமிழை வழக்காடு மொழியாக அறிவித்தல் ஆகிய கோரிக்கைகள் முன்வைத்துள்ளார்.
அதன்படி, உச்ச நீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாசார பிரதிநித்துவம் அமைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் சமூக பன்முகத்தன்மை, சமூக நீதியை பேணும் வகையில் மாற்றம் தேவை எனவும் கூறியுள்ளார். மேலும், சட்டத்தையும், நீதியையும் சாமானிய மக்களுக்கு புரிய வைப்பது நீதி வழங்கல் துறையின் கடமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் சமூக நீதியைப் பின்பற்றிட வேண்டுமென்றும், உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளைகளை புதுதில்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நிறுவிட வேண்டு மென்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளார்.
நீதித்துறை தொடர்பான சில முக்கிய விஷயங்களை மாண்புமிகு இந்தியப் பிரதமர் மற்றும் மாண்புமிகு உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகவும், அவை விரைவில் கவனிக்கப்பட வேண்டுமென்றும் தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். கூட்டாட்சிக் கட்டமைப்பே இந்திய அரசியலமைப்பின் அடித்தளம் என்றும், ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டமன்றம், நிருவாகம் மற்றும் நீதித்துறை ஆகியவை இந்த கூட்டாட்சிக் கட்டமைப்பிற்குள் நிறுவப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களில் பல்வேறு நிலைகளில் நீதிமன்றங்கள் இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும், அலுவலர்களும் பின்பற்றும் வகையில் நீதித் துறையின் அமைப்பு உள்ளதைச் சுட்டிக்காட்டி, மற்ற அம்சங்களில், நீதித்துறையும் நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்தப் பின்னணியில், உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் நமது நாட்டின் பன்முகத்தன்மையோடு அமைய வேண்டுமென்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் நீதிபதிகள் நியமிக்கப்படும்போதுதான், பன்முகத் தன்மையும், ஒட்டுமொத்த சமூகத்தின் கண்ணோட்டங்களும், உணர்வுகளும் பிரதிபலிக்க ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அந்த வகையில், உச்ச நீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டுமென்று தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். எனவே, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் சமூகப் பன்முகத்தன்மையையும், சமூக நீதியையும் பேணும் வகையில், நீதிபதிகளை நியமிப்பதற்கான நடைமுறைக் குறிப்பில் அதற்கேற்ப உரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று மாண்புமிகு இந்தியப் பிரதமர் மற்றும் மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசர் ஆகியோரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
அடுத்து, நாட்டின் கூட்டாட்சித்தன்மை நீதித்துறையில் பிரதிபலிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளைகளை பல்வேறு மாநிலங்களில் நிறுவ வேண்டியதன் தேவையையும் தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுத்துரைத்துள்ளார். நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் நீதிமன்றத்தை நேரடியாக அணுக வேண்டும் என்ற அடிப்படையில்தான் அரசமைப்புச் சட்டத்தை வகுத்தளித்தவர்கள் 32-வது பிரிவை இயற்றியுள்ளனர் என்றும், ஆனால், உச்ச நீதிமன்றத்திற்கு அருகில் இருக்கும் மாநிலங்களைச் சார்ந்த குடிமக்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும் நிலை உள்ளது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் பல்வேறு உயர் நீதிமன்றங்கள் இருந்தாலும், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடுகளின் எண்ணிக்கை அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களிலிருந்து அதிகம் என்பதை தரவுகளிலிருந்து அறிய முடிகிறது என்று தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அரசியல் நிர்ணய சபையில் இது தொடர்பாக நடைபெற்றுள்ள விவாதங்களும், பாராளுமன்ற நிலைக்குழுக்களின் பரிந்துரைகளும், பல்வேறு சட்ட ஆணையங்களின் அறிக்கைகளும் உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை மாநிலங்களில் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, புதுதில்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளைகளை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். அடுத்து, கூட்டாட்சித் தத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் மற்றொரு விஷயமான உயர் நீதிமன்றங்களின் அலுவல் மொழி குறித்து மாண்புமிகு இந்தியப் பிரதமர் மற்றும் மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய நான்கு உயர் நீதிமன்றங்களில், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை ஆக்குவதற்கு ஏதுவாக, தமிழ் மொழியில் தரமான சட்ட நூல்களை வெளியிடுவதற்கு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும், செம்மொழியாகவும், அதே சமயம் நவீன மொழியாகவும் உள்ள தமிழ் மொழியினை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக பயன்படுத்துவது முற்றிலும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தையும், நீதியையும் சாமானிய மக்களுக்குப் புரியவைப்பது நீதி வழங்கல் அமைப்பின் இன்றியமையாத கடமை என்றும், அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாநிலத்தின் அலுவல் மொழியை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஆக்குவதில் உள்ள சிரமங்களை நவீன தொழில்நுட்பத்தின்மூலம் எளிதில் சரிசெய்திட முடியும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழக அரசின் அலுவல் மொழியான தமிழை, ஆங்கிலத்துடன் சேர்த்து, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளையின் அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோரியுள்ளார். மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் முன்னிலையில் கடந்த 23-4-2022 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், இந்த மூன்று கோரிக்கைகளையும் தான் முன்வைத்ததாகவும், இவை எதிர்காலத்தில் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும், மாண்புமிகு உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் திரு. என்.வி. ரமணா அவர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.