சிவபெருமானின் மாகேஸ்வர மூர்த்தங்களில் ஒன்று அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம். சிவபெருமானும் பார்வதிதேவியும் சரிபாதியினராக இடப்பக்கம் சிவபெருமானும், வலதுபக்கம் சக்தியுமாக விளங்கிடும் அற்புதக்கோலம் இது.
தலைசிறந்த சிவபக்தரான பிருங்கி முனிவர் சிவபெருமானைத் தவிர வேறெவரையும் வணங்காதவர். ஈசனும், தேவியும் திருக்கயிலாயத்தில் மகிழ்வுடன் நெருங்கி அமர்ந்திருந்தபோது, அங்குசென்ற பிருங்கி முனிவர் வண்டுரு தாங்கியவராய், அன்னையை விடுத்து ஈசனை மட்டும் துளைத்து வலம் செய்தார்.
இது கண்டு வெகுண்ட உமையானவள் பிருங்கியின் உடலிலிருந்து சக்தி விலகும்படி சாபமிட்டாள். சக்தியை இழந்த முனிவரின் உடல் தளர்வுற்று வீழ்ந்தது. மூன்றாவதாக ஒரு காலினை ஊன்றுவதற்காக முனிவருக்குக் கொடுத்தருளினார் சிவபெருமான். ஆயினும், தனது நிலைப்பாட்டினை உணர்த்திட விரும்பிய அன்னையோ கோபங்கொண்டு சிவபெருமானைப் பிரிந்தார். சிவபூஜை செய்து கடுமையாகத் தவமியற்றினாள்.
‘சக்தியில்லையேல் சிவம் இல்லை’ என்பதனை உணர்த்திடும் விதமாக இறுதியில் கேதாரத்தில் காட்சியளித்த எம்பெருமான் தன்னில் சரிபாதியானவள் சக்தி என்பதை உலகோர் அறிந்திடும்படி ‘அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்தருளினார்’ என்பது புராண வரலாறு.
இப்படி அம்மையப்பர் ஒருமித்த நிலையில் கேதார கௌரீஸ்வரராகக் காட்சியளித்த தினமே ‘கேதார கௌரீ’ எனப்பெறும் நோன்பு நாளாக ஐப்பசி – தீபாவளிப் பண்டிகையையொட்டிக் கொண்டாடப் பெறுகிறது. அதுபோலவே ‘அர்த்த நாரீஸ்வரர் விரதம்’ என்ற பெயரிலும் இந்த விரதம் செய்யப்பெறுகின்றது.
தம்பதியினர் ஒற்றுமை சிறந்திடவும், பிரிந்தவர் ஒன்று சேர்ந்திடவும் வழிபடவேண்டிய தெய்வ வடிவம் இந்த அர்த்தநாரீஸ்வரர்.
பெளர்ணமி சுக்ரவார தினங்களில் அர்த்தநாரீஸ்வரர் சந்நிதிகளில் தீபமேற்றி வணங்கி வந்தாலோ, அல்லது வில்வ தளங்களால் அர்ச்சித்து வழிபட்டாலோ குடும்பப் பிரச்னைகள் குறைந்து இல்லற ஒற்றுமை மேம்படும் என்பது ஐதிகம்.
திருக்கடவூர் காலசம்ஹாரத்திற்குப் பிறகு, மத்யார்ஜுனமான திருவிடைமருதூர் தலத்தில் வழிபட்டு நின்றபோது, மார்க்கண்டேயரின் பக்தியில் மகிழ்ந்த ஈசன் அவரது வேண்டுதலை ஏற்று அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளித்தாராம். அத்துடன் “இத்திருத்தலத்திற்கு வந்து தம்மைத் தொழுதிடும் அன்பர்களுக்கு எல்லா நன்மைகளையும் தாம் அருளுவதாகவும் வரமளித்தார்” என்று மத்யார்ஜுனேஸ்வர மஹாத்மியம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அர்த்தநாரீசுவரரை வழிபட்டு வளம் பெறலாமே!