புதுடெல்லி: நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 15-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக தற்போது இருந்து வரும் சுஷில் சந்திராவின் பதவிக்காலம் வரும் 14-ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக தற்போது மூத்த தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். வரும் 15-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவியேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது 62 வயதாகும் ராஜீவ் குமார், 1984-ம் ஆண்டின் ஜார்க்கண்ட் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவார். மத்திய அரசின் பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசின் நிதித் துறை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வு வாரியத் தலை வராக நியமிக்கப்பட்டார். 2020 ஆகஸ்டில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இப்போது மூத்த தேர்தல் ஆணையர் என்பதால் பணி மூப்பு அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.