தாஜ்மஹாலில் பூட்டப்பட்ட 20 அறைகளை திறக்கக் கோரி வழக்கு – அலகாபாத் உயர்நீதிமன்றம் காட்டம்

தாஜ்மஹாலில் பூட்டப்பட்டு உள்ள 20 அறைகளை திறக்கக் கோரிய வழக்கில் பொதுநல மனுக்களை கேலிக்கூத்தாக்காதீர்கள் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது

தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 20 அறைகளை திறக்கக் கோரிய  வழக்கு விசாரணை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னவ் கிளையில் நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் நடைபெற்றது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”தாஜ்மஹாலின் உண்மை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் தொல்லியல் ஆய்வுத்துறையிடல் கொடுக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காணங்களுக்காக அந்த அறைகள் பூட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பூட்டப்பட்டுள்ள அந்த அறைகளில் பல விசயங்கள் மறைந்துள்ளன, அது என்ன என்பது பொது வெளிக்கு கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பாக முகலாய மன்னர் அவுரங்கசீப் தனது தந்தைக்கு எழுதிய கடிதம் கூட உள்ளதாக கூறப்படுகிறது” என்று வாதிட்டார்.

அதற்கு பதிலளித்த உத்தரப் பிரதேச அரசு வழக்கறிஞர், ”வழக்கை தற்போது இந்த நீதிமன்றத்தில் தொடுக்க மனுதாரர்களுக்கு முகாந்திரம் இல்லை, ஏனெனில் ஏற்கனவே ஆக்ரா நீதிமன்றத்தில் ஒரு  வழக்கு நிலுவையில் உள்ளது என சுட்டிக்காட்டினார்

image
அதற்கு மறுப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கில் நிலம் யாருடையது என்று நான் கோரவில்லை, மாறாக தாஜ்மஹாலில் புதைந்துள்ள உண்மைகள் வெளிவர வேண்டும், குறிப்பாக பூட்டப்பட்டுள்ள அறைகள் திறக்கப்பட வேண்டும் என்பதே. மேலும் அந்த கட்டுமானத்தின் வயது தொடர்பாக சந்தேகம் எழுப்பும் சில தரவுகளை இணைத்துள்ளேன் எனக் கூறினார்

அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள் தாஜ்மஹாலின் வயதை சந்தேகிக்கிறீர்கள் என்றால், ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டவில்லை எனக்கூறுகிறீர்களா? இங்கு தாஜ்மஹால் யார் கட்டியது என்று தீர்ப்பு கூறவா இன்று நீதிமன்றம் கூடியுள்ளது. வரலாற்று விசயங்கள், தரவுகளுக்குள் போக விரும்பவில்லை. பூட்டப்பட்டுள்ள கதவுகளை திறக்க வேண்டும், உண்மை கண்டறியும் குழு ஏற்படுத்த வேண்டும் என்பதே உங்கள் கோரிக்கை. எந்த அடிப்படையில், எந்த உரிமையில் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகினார் என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்

நாட்டு குடிமகன் என்ற அடிப்படையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்தான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறும்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒரு விஷயம் தொடர்பான தரவுகளையே அறிய முடியும், கேட்க முடியும், மாறாக ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். ஆராய்ச்சி நடத்த வேண்டும் என அந்த சட்டத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது?

அதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு, தாஜ்மஹால் குறித்து உண்மை கண்டறியும் குழு அமைக்க வேண்டும் என கோருகிறேன். நமக்கு தவறான வரலாறு கற்பித்திருந்தால் அது திருத்தப்பட வேண்டும். மேலும் பூட்டப்பட்ட அறைகளுக்குள் செல்ல தங்களை அனுமதிக்க வேண்டும் என மீண்டும் மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.

image
இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய எம்.ஏ, நெட், ஜே.ஆர்.எஃப் உள்ளிட்ட படிப்புகளில் உங்களை இணைத்து கொண்டு ஆய்வு செய்ய கோருங்கள். அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுங்கள். நாளை நீதிபதிகளின் அறைகளுக்குள் செல்லவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் கோருவீர்களா? பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிகூத்து ஆக்காதீர்கள். இந்த விவகாரம் தொடர்பாக தனியாக விவாதிக்க வாருங்கள் ஏற்கிறோம். ஆனால் நீதிமன்றத்தில் இது போன்று  நடந்து கொள்ளாதீர்கள். எந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தீன் கீழ் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என கோருகிறீர்கள் என்பது தொடர்பாக பதிலளியுங்கள். பிற்பகல் 2 மணி வரை அவகாசம்  தருகிறோம் என காட்டமாக கூறி மதியம் 2 மணிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.