வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: தாஜ்மஹாலில் மூடப்பட்டுள்ள 22 அறைகளை திறந்து ஆய்வு செய்யக்கோரிய மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை தள்ளுபடி செய்தது.
உத்தர பிரதேசத்தில் ஆக்ராவில் உலக புகழ் பெற்ற தாஜ் மஹால் உள்ளது. இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில், பா.ஜ.,வை சேர்ந்த ரஜ்னீஷ் சிங் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: துறவியரும், ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தோரும், தாஜ் மஹால் ஒரு காலத்தில் புகழ் பெற்ற சிவன் கோவிலாக இருந்தது என கூறி வருகின்றனர்.’தேஜோ மகாளயா’ என்ற பெயரில் இருந்த சிவன் கோவில் தான், தாஜ் மஹாலாக மாற்றப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இதற்கு வரலாற்று ஆசிரியர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகள் மூடிவைக்கப்பட்டுள்ளன.
அங்கு ஹிந்து தெய்வங்களின் சிலைகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அறைகளின் கதவுகள் பூட்டப்பட்டு உள்ளன என, இந்திய தொல்லியல் துறை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது. மூடப்பட்டுள்ள அறைகளுக்குள் என்ன உள்ளது என்பதை அறிய வேண்டும். உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து, மூடப்பட்டுள்ள அறைகளை திறந்து ஆய்வு செய்ய, தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த நீதிமன்றம், 22 அறைகளை திறக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Advertisement