“பாஜக-வில் இணைந்ததற்கான காரணம் என்ன?”
“இனிமேல் தமிழ்நாட்டில் பா.ஜ.க-தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க குறைந்தது 30 இடங்களிலாவது வெற்றி பெறும் அளவுக்கு சக்தி வாய்ந்த கட்சி தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது. மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியாக, சமூகரீதியில், சமூக சீர்திருத்த ரீதியில் அக்கட்சி முக்கியமான பணிகளைச் செய்து வருகின்றது. மதவாதக் கட்சி என்று அதை அடையாளப்படுத்துகிறார்கள் அதில் உண்மை இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் ஒரே இடம் பா.ஜ.க-வாக இருப்பதால்தான் நான் அதில் இணையும் முடிவை எடுத்தேன். இணைந்திருக்கிறேன்.”
“பா.ஜ.க-வில் இணையப் போவது குறித்த செய்திகள் வெளியான பிறகுதான் நீங்கள் தி.மு.க-வில் இருப்பதே தெரிகிறது. உண்மையில் தி.மு.க-வில்தான் இருந்தீர்களா?”
“கல்லூரி காலத்திலேயே தி.மு.க-வுக்காக போராடியதற்காக நான் சிறைக்குச் சென்றிருக்கிறேன். அதாவது நான் எனக்கு விவரம் தெரிவதற்கு முன்பிருந்தே அரசியலில்தான் இருக்கிறேன் என்பதைச் சொலதற்காக இதைச் சொல்கிறேன். 15 ஆண்டுகளாக நான் தி.மு.க-வில் இருக்கிறேன். எனக்குத் தொழில் எதுவும் இல்லை. அரசியல்தான் என்னுடைய தொழில். இவ்வளவு காலம் உழைத்தற்கான அங்கீகாரம் வேண்டும் எனக் கேட்டேன். ஆனால், அது கிடைக்கவில்லை. கனிமொழியின் ஆதரவாளர் என்பதால் தரவில்லை என்றார்கள். உழைக்கத் தயாராக இருக்கிறேன். அதற்கான அங்கீகாரம் வேண்டும் என்பதால்தான் பா.ஜ.க-வுக்குச் செல்கிறேன்.”
“இவ்வளவு காலம் உழைத்திருக்கிறீர்கள் என்பது தலைமைக்குத் தெரியுமா, கொண்டு சென்றிருக்கீர்களா?”
“உழைத்தது யாருக்குத் தெரியப்படுத்த வேண்டும். கட்சிக்காக பிளக்ஸ், போஸ்டர் அடித்து விளம்பரம் செய்திருக்கிறேன். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறேன். சென்னையில் மிகப்பெரிய போஸ்டர்களை எல்லாம் அடித்திருக்கிறேன். இப்படியெல்லாம் செய்வது நம்மைப் பற்றித் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தானே. வேறெப்படித் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். உழைப்பவர்களைத் தலைமைதானே அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.”
“உழைத்திருந்தால் நிச்சயம் அங்கீகாரம் கிடைத்திருக்குமே, தி.மு.க-வில் அதற்கு பலரை உதாரணமாகச் சொல்லலாமே?”
“எனக்கும் என் அப்பாவுக்கும் விரிசல் இருக்கிறது. அது தொடர்பாக நிறையப் பேசிவிட்டேன். அதனாலேயே என்னை அவர் அங்கீகரிக்க வில்லை. என்னை அவருடைய மகன் என்று சொல்லிக்கொள்வதற்கான எந்த அடையாளமும் இல்லை. நான் கனிமொழிக்காக வேலை பார்த்தபோது என் தந்தைக்கும் கனிமொழிக்கும் ஒரு புகைச்சல் இருந்துகொண்டே இருந்தது. கடைசி காலத்தை நெருங்கும் தி.மு.க தலைவர்கள் தங்களின் கடைசி காலம் நெருங்குவதை உணர்ந்து போராடி அவர்களின் பிள்ளைகளுக்கான இடத்தை உறுதி செய்தார்கள். அப்படித்தான் இப்போது கட்சியில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களின் பிள்ளைகளுக்கான இடம் உருவாக்கப்பட்டது. ஆனால், என்னுடைய தந்தை அப்படி எனக்கு எதுவும் செய்யவில்லை. எனக்கும் அப்பா ஏதும் செய்ய வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை.”
“கனிமொழி உடன் இவ்வளவு நாள் உழைத்திருக்கிறீர்கள். ஆனாலும் அங்கீகாரம் கிடைக்கவில்லையா?”
“கனிமொழி உண்மையில் மிகவும் நல்ல மனிதர். ஆனால், அவரால் எனக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில்தான் அவர் இருக்கிறார். உதயநிதி – கனிமொழி இடையேயான பனிப்போரில் கனிமொழியை டம்மி ஆக்குகிறார்கள். மாப்பிள்ளைக்கும் உதயநிதிக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. இப்படி உள்ளுக்குள் இருக்கும் அரசியலைப் பேச ஒரு மணி நேரம் கூடுதலாக ஆகும். இப்படியான சிக்கலில் தி.மு.க இருப்பதனால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.”
”தி.மு.க தலைவரைப் பார்க்க ஏதாவது முயற்சி செய்தீர்களா?”
“அவரை நல்ல காலத்திலேயே யாரும் பார்க்க முடியாது. இப்போது முதல்வராகிவிட்டார். எப்படிப் பார்ப்பார். அ.தி.மு.க-வில் இருப்பவர்களைக் கைது செய்வதே முக்கிய வேலையாக வைத்திருக்கிறார். கட்சியில் என்னைப் போல அங்கீகரிக்கப்படாதவர்கள் அதிகமிருக்கிறார்கள். நேரம் வரும்போது என்னைப் போல அவர்களும் வெளியில் வருவார்கள்.”
“நீங்கள் பா.ஜ.க-வுக்குச் செல்வதால் திமு.க-வுக்கு என்ன இழப்பு என நினைக்கிறீர்கள்?”
“வேட்பாளர் முதற்கொண்டு மாவட்டச் செயலாளர் வரை சாதி, மத அடிப்படையில்தான் நியமிக்கிறார்கள். மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ-க்கள் என பலரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். வேலை பார்த்த பலரையும் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். அமைச்சர்களைச் சம்பாதிக்க விடாமல் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கட்சிக்குள் பெரிய அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. அடுத்த தேர்தலில் தி.மு.க-வுக்கு மிகப்பெரிய தோல்வி கிடைக்கும். நான் பா.ஜ.க-வுக்குப் போவதால் தி.மு.க-வுக்கு எந்த இழப்பும் இல்லை. அந்த நோக்கமுன் எனக்கு இல்லை நான் போகும் இடத்தில் எனக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும். உழைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகத்தான்.”