டெல்லி: தேசியப் பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள சித்ரா ராமகிருஷ்ணா,ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பாக, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குத் தொடா்பாக, ஆனந்த் சுப்பிரமணியனை பிப்ரவரி 25-ம் தேதியும், சித்ரா ராமகிருஷ்ணாவை மாா்ச் 6-ம் தேதியும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். அவர்கள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா். இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் வழங்குவதற்கு போதிய காரணம் இல்லை என்று கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எனவே சித்ரா ராமகிருஷ்ணா நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.