புதுச்சேரி: கல்வியை தனியாருக்கு கொடுக்கும் ஏற்பாடுதான் நீட், க்யூட் தேர்வுகள். கோச்சிங் சென்டரினால் ரூ.15 ஆயிரம் கோடி வர்த்தகம் நடப்பதுடன், அதில் ஜிஎஸ்டி வரவு மத்திய அரசுக்கு கிடைக்கிறது என்று பொது பள்ளிக்கான மாநில மேடை பொறுப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு – புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நீட் மற்றும் கியூட் தேர்வுகளை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று புதுவை பல்கலைக்கழகத்தின் 2வது நுழைவு வாயில் முன்பு நடந்தது. புதுச்சேரி செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். சிபிஐ ராமமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொது பள்ளிக்கான மாநில மேடை பொறுப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சிபிஎம் பிரதேச செயலாளர் ராஜாங்கம், தமிழ் மாநில குழு உறுப்பினர் பெருமாள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணை தலைவர் ஆனந்தன், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாணவர்களுக்கு எதிரான நீட் மற்றும் கியூட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். மத்திய பல்கலைக்கழகங்களில் அனைத்து பாடப் பிரிவுக்கும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். உயர்கல்வி நிலையங்களில் போதுமான ஆசிரியர்கள், வகுப்பறைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அமைக்க வேண்டும். மத்திய, மாநில இசைவு பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஆசிரியர் இடஒதுக்கீட்டிற்கான பணி நியமனங்களை உரிய காலத்தில் நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இக்கூட்டத்தில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசுகையில், “இந்தியக் கல்வியை தனியாருக்கு கொடுக்கும் ஏற்பாடு தான் நீட்,க்யூட் தேர்வுகள். உலக வர்த்தக அமைப்பானது கல்வியை வணிக பொருளாகப் பார்க்கிறது. அதனால் அவ்வமைப்பின் கீழ் சேர்க்கக்கூடாது என்ற எதிர்ப்பு இருந்தது.
மாநிலத்தில் பிளஸ் 2 முடித்து விட்டால் கல்லூரி சேர்வது வழக்கம். பட்டப்படிப்பு முடிந்தால் போட்டித்தேர்வு எழுதலாம்.
ஆனால் இப்போது மத்திய அரசானது பிளஸ் 2க்கு தகுதிகிடையாது என்று குறிப்பிட்டு,. தற்போது மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்க, பட்டப்படிப்பு படிக்கவும் க்யூட் தேர்வு எழுத வேண்டும் என்றுள்ளது. நீட், க்யூட் தேர்வுகளில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படுகிறது. உலகில் எந்த பகுதியிலாவது 18 வயது குழந்தைகளுக்கான தேர்வில், தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் உள்ளதா- இதுதான் இத்தேர்வுகளுக்காக கோச்சிங் சென்டர் செல்ல தூண்டுகிறது. கோச்சிங் சென்டரால் ரூ. 15 ஆயிரம் கோடி வர்த்தகம் நடப்பதுடன், அதில் ஜிஎஸ்டி வரவு மத்திய அரசுக்கு கிடைக்கும். பள்ளிகள் நடத்தினால் மத்திய அரசுக்கு செலவு- கோச்சிங் சென்டர் நடத்தினால் வரவு கிடைக்கிறது.
மத்திய அரசு பட்டியலில் கல்வி இல்லை. உயர்கல்வி தரத்தை தீர்மானித்தல் மட்டுமே உள்ளது. பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான முழு அதிகாரம் மத்திய அரசிடமில்லை-மாநில அரசிடம்தான் உள்ளது. மத்திய அரசும்-மாநில அரசும் சமபங்காளிகள். ஒருவரது அதிகாரத்தை மற்றொருவர் எடுக்க முடியாது-நீதிமன்றமும் செய்ய இயலாது எனஅரசியலமைப்பில் அம்பபேத்கர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பில் கல்வி விஷயத்தில் அம்பேத்கர் கொடுத்த விளக்கத்தை பொய்யாக்குகிறார் நரேந்திரமோடி. ” என்று குறிப்பிட்டார்.