குஜராத் மாநிலத்தில், அரசு திட்டங்கள் மூலம் பயனடைந்தவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அவரிடம் உரையாடிய விழித்திறன் சவால் கொண்ட அயூப் படேல், தன் மகள் மருத்துவராக விரும்புவதற்கான காரணத்தைக் கூறியபோது பிரதமர் மோடி கண் கலங்கினார்.
குஜராத் மாநிலத்தில் அரசு திட்டங்கள் மூலம் பயனடைந்தவர்களிடம் மோடி உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது விழிசவால் கொண்ட அயூப் படேல் என்பவர் தன் அனுபவத்தை பகிர்ந்தார். அவரிடம் மோடி, ‘உங்கள் மகள்களுக்கு கல்வியைக் கொடுக்கிறீர்களா’ என்று கேட்டார்.
அதற்கு பதில் அயூப், தன் மூன்று மகள்களும் படித்துக் கொண்டிருப்பதாகவும், அதில் இருவர் அரசு உதவித்தொகை பெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், 12-ம் வகுப்பு படித்து வரும் தன் மூத்த மகளுக்கு, மருத்துவராவதே கனவு என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அயூப் படேலின் மகளிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார் மோடி, அப்போது பேசிய அயூப் படேலின் மகள், ”என் அப்பாவுக்கு ஏற்பட்ட பிரச்னையே என் மருத்துவர் கனவுக்கு காரணம். என் அப்பா சவுதி அரேபியாவில் பணிபுரியும்போது அவர் பயன்படுத்திய கண் சொட்டு மருந்தினால் அவருக்கு பார்வைத்திறன் குறைய ஆரம்பித்து’ என்று சொல்லி அழுதார் அந்தப் பெண்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி மனமுடைந்து, பேச முடியாமல் கண் கலங்கினார். அதோடு மகளின் கனவை நனவாக்க என்ன உதவி வேண்டுமானாலும் கேட்கும்படியும் படேலிடம் கேட்டுக்கொண்டார்.