கீவ்,:ரஷ்யா – உக்ரைன் இடையில் போர் நடந்து வரும் நிலையில், ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் இணைய, பின்லாந்து முடிவு செய்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், நேட்டோவில் இணைய விரும்பியதை ரஷ்யா கடுமையாக எதிர்த்து வந்தது. இதன் விளைவாக, பிப்ரவரி 24ம் தேதி முதல், உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனினும், இதற்கு உக்ரைன் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ரஷ்ய படையினர், துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றுவதில் உறுதியாக உள்ளனர். அந்நகரின் பெரும்பாலான பகுதிகளை, ரஷ்ய படையினர் கைப்பற்றிவிட்டனர். எனினும், அஜோவ்ஸ்டால் ஸ்டீல் ஆலை அமைந்துள்ள பகுதி மட்டும், உக்ரைன் வசம் உள்ளது.
எனவே, அந்த பகுதியில், ரஷ்யா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஏராளமான உக்ரைன் வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.காயமடைந்த வீரர்களை பாதுகாப்பாக மீட்டுச் செல்வதற்கான சூழலை ரஷ்ய படையினர் ஏற்படுத்திக் கொடுத்தால், தங்களால் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்ய வீரர்களை விடுவிப்பதாக, உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, இருநாட்டு அதிகாரிகளுக்கு இடையே பேச்சு நடந்து வருவதாக, உக்ரைன் துணை பிரதமர் ஐரினா வெரெஷ்சுக் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்து, நேட்டோ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் இணைய முடிவு செய்துள்ளது.
தாமதிக்காமல், நேட்டோவில் உறுப்பினராவதற்கு விண்ணப்பிக்க உள்ளதாக, பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோ, பிரதமர் சானா மரின் இருவரும் தெரிவித்துள்ளனர்.இதில் உறுப்பினராவதன் மூலம், நாட்டின் பாதுகாப்பு வலுபெறும் என அந்நாட்டு தலைவர்கள் நம்புகின்றனர். இதேபோல், நேட்டோவில் இணைவது குறித்து, மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்வீடனும், அடுத்த சில நாட்களில் முடிவு எடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Advertisement