வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமர் மோடி தனது அலுவலகத்தில் முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டபோது மயில் ஒன்று பசியில் இருப்பதை அறிந்து கூட்டத்தை பாதியில் நிறுத்தி உணவளிக்க செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழ்ந்துள்ளார்.
டில்லியில் ‘மோடி அட் 20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி’ என்ற தலைப்பில் பிரதமரின் 20 ஆண்டு அரசியல் பயணத்தின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மயில் ஒன்று பசியால் அலுவலக ஜன்னல் கண்ணாடியை கொத்திக்கொண்டு இருந்தது.
சப்தம் கேட்டு ஜன்னலை பார்த்த மோடி, மயில் பசியில் இருப்பதை அறிந்து, உடனே கூட்டத்தை சிறிது நேரம் நிறுத்திவிட்டு தனது ஊழியரை அழைத்தார். அவரிடம் ஜன்னலில் பசியோடு நிற்கும் மயிலுக்கு உணவு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஒரு முக்கியமான கூட்டத்தில் ஆலோசனையில் மூழ்கி இருந்தபோதும் மயில் குறித்து சிந்திக்கும் அளவுக்கு பிரதமர் மோடி உணர்ச்சி மிக்கவர் என்பதை காட்டுகிறது. அவர் திறமையான தலைவர்.
பஞ்சாயத்து அளவில் கூட அனுபவம் இல்லாத போதிலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் முதல்வராக அவர் பதவியேற்று மிகச்சிறப்பாக பணியாற்றினார். இதனால் தொடர்ந்து வெற்றி பெற்று அம்மாநிலத்தை திறமையாக நடத்தினார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
Advertisement