பணம் எடுக்க, செலுத்த ஆதார், பான் கார்டு கட்டாயம்| Dinamalar

புதுடில்லி: வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்களில், ஓர் நிதியாண்டில், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்தினாலோ அல்லது எடுத்தாலோ, பான் மற்றும் ஆதார் எண் தெரிவிப்பது கட்டாயம் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த புதிய விதிகள், இம்மாதம் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.தற்போது, ஒரு நாளில் 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ‘டெபாசிட்’ செய்தால், பான் எண் கட்டாயம் என உள்ளது. ஆனால் பணம் எடுப்பதற்கு தேவையில்லை. மேலும், இதற்கு ஆண்டு வரம்பு எதுவும் இல்லாமல் இருந்தது.

இந்த புதிய விதிகளின்படி, இனி ஒரு நிதியாண்டில், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கணக்குகளில் இருந்து, ஒருவர் 20 லட்சம் ரூபாயை தாண்டி பணம் எடுத்தாலும், போட்டாலும், பான் அல்லது ஆதார் எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆகிறது. இதன் வாயிலாக, ஒரு நிதியாண்டில், ஒருவர் மொத்தம் எவ்வளவு பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளார்; அதற்கு வரிப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை வரி துறையினர் எளிதாக அறிந்துகொள்ள இயலும்.

புதிய விதிகள்:

* வங்கி, தபால் அலுவலகம், கூட்டுறவு வங்கி போன்றவற்றில், ஒரு நபர், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்கில், ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை செலுத்துவதற்கு ஆதார் அல்லது பான் கார்டு கட்டாயம்

*இதேபோல் ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளிலிருந்து எடுப்பதற்கும் ஆதார் அல்லது பான் எண் கட்டாயம்.

* வங்கி, தபால் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் நடப்புக் கணக்கு அல்லது ரொக்க கடன் கணக்கு துவங்கும்போதும், ஆதார் அல்லது பான் எண் கட்டாயம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.