தார்வாட் : தார்வாட் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த கைதி, உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால், உடல்நிலை பாதிப்படைந்து சிகிச்சை பெறுகிறார்.பாகிஸ்தானைச் சேர்ந்தவர் முகமது பஹாத்; தடை செய்யப்பட்ட அல் பர்த் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர். இவர்,
கேரளாவை சேர்ந்த சிலரின் உதவியுடன், போலி ஆவணங்களுடன் இந்தியாவுக்குள் நுழைந்தார்.மைசூரில் சில பயங்கரவாத அமைப்பினர், பயங்கரவாத செயல்களுக்கு சதி செய்வதாக, உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர். இதையடுத்து, விசாரணை நடத்திய போலீசார், 2006ல் முகமத் பஹாத்தை கைது செய்து, தார்வாட் சிறையில் அடைத்திருந்தனர்.மற்ற கைதிகளுடன், எப்போதும் தகராறு செய்வதால், இவரை தனியறையில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் இவர், தன் மீதான வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்த வலியுறுத்தி, மே 3ல் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார். உண்ணாவிரதத்தை நிறுத்த, அதிகாரிகள் முயற்சித்தும் பயனில்லை. இதனால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை கிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். இம்மருத்துவமனையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Advertisement