பிரதமர் பதவி தொடர்பில் சரத் பொன்சேகாவை தொடர்புகொண்ட ஜனாதிபதி – கொழும்பு ஊடகம் தகவல்



பிரதமர் பதவியை வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவைத் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்படாததன் காரணமாக தற்போதைய அரசியல் நெருக்கடியை முறியடிக்கும் முயற்சியில் ஜனாதிபதி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தாம் பிரதமராக நியமிக்கப்பட்டால், நாட்டை ஆளக்கூடிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெறுவதற்கு தனக்குப் பின்னால் பலம் இருப்பதாக பொன்சேகா நிரூபிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அடுத்த பிரதமர் யார் என்பது குறித்தும், உத்தேச இடைக்கால அரசாங்கத்தில் பொறுப்புகளை ஏற்பது குறித்தும் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் இது தொடர வாய்ப்புள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதியாக இடைக்கால அரசாங்கத்தில் இணைவது குறித்து பரிசீலிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கோரியிருந்தார்.

எனினும், சரத் பொன்சேகா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டிருப்பதால் கட்சியில் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.