சென்னை: ஆம்பூரில் நடைபெறும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணியை மட்டும் தடை செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் இயங்கி வரும் நீலம் பண்பாட்டு மையத்தின் ட்விட்டர் பக்கத்தில், ” திருப்பத்தூர், ஆம்பூர் பகுதியில் பிரியாணி திருவிழா நடைபெறுவதை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடந்துள்ளது. பீப் பிரியாணியை மட்டும் தடை செய்து மீதமுள்ள 50-க்கும் மேற்பட்ட பிரியாணி கடை அமைக்கப்படும் என்று கூறியது மிகவும் கண்டனத்துக்குரியது” என்று பதிவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெற 3 நாட்களுக்கு பிரியாணி திருவிழா மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, இந்திய அளவில் ஆம்பூர் பிரியாணிக்கு தனி மவுசு உண்டு என்றால் அது மிகையாகாது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆம்பூர் பிரியாணியின் சுவையின் சிறப்பை மேலும் முன்னெடுத்து செல்ல ஆம்பூரில் 3 நாட்கள் பிரியாணி திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டது.
திருப்பத்தூர்,ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் #பீப்_பிரியாணி மட்டும் வேண்டாம் எனக் ஆட்சியர் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதை வன்மையாக கண்டிப்போம்!#பீப்_பிரியாணியை மட்டும் தடை செய்ய வேண்டும் என்று அதிகாரம் யார் கொடுத்தது.
அரசு இப்போக்கை தடுக்க வேண்டும்.#Ambur_BeefBriyani@beemji pic.twitter.com/0NZBvDjEJy
— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) May 12, 2022
இதைத்தொடர்ந்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஆம்பூர் வர்த்தக மையத்தில் மே 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு பிரியாணி திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதற்காக அங்கு 20 முதல் 30 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை குறைந்த விலையில் பிரியாணி கிடைக்கும். அரேபியன் பிரியாணி, மட்டன், சிக்கன், மீன், முட்டை, இறால் உள்ளிட்ட பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, ஐதராபாத் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஆம்பூர் தம் பிரியாணி, ஆம்பூர் ஸ்பெஷல் பிரியாணி என 24 வகையான பிரியாணிகள் இங்கு கிடைக்கும் என்று கூறியிருந்தார்.