வாரணாசி: காசி விஸ்வநாதர் கோயிலின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தபிறகு கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி எனப்படும் காசியில் உள்ள விஸ்வநாதர் கோயில் புகழ்பெற்றது. கோயிலுக்கு செல்லும் சாலைகள் மிகவும் குறுகலாகவும் மேலும், ஆலய வளாகம் ஆக்கிரமிப்புகள் காரணமாக சிறிதாகவும் இருந்ததால் மக்கள் நெருக்கடி அதிகமாகி பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், கோயிலுக்கு செல்வதற்கும் பக்தர்கள் வசதியாக சுவாமி தரிசனம் செய்யும் வகையிலும் ரூ.600 கோடி மதிப்பீட்டில் புதிய வளாகம் அமைக்கப்பட்டது. இது பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாகவே கருதப்பட்டது.
இந்நிலையில், கோயிலுக்கு செல்லும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நூலகம், அருங்காட்சியகத்துடன் கூடிய புதிய வளாகத்தை கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், கங்கை நதிக்கரையில் இருந்து விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் நடைபாதையையும் அவர் திறந்து வைத்தார். இதனால், கங்கையில் புனித நீராடிவிட்டு அங்கிருந்து நேரடியாக பக்தர்கள் கோயிலுக்கு வரமுடியும். பக்தர்கள் தங்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்த பிறகு விஸ்வநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே சாதாரண நாட்களில் 35 ஆயிரம் பக்தர்கள்தான் கோயிலுக்கு வருவார்கள். இப்போது, பக்தர்கள் வருகை இருமடங்காக அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களில் 70 ஆயிரம் பக்தர்கள் விஸ்வநாதரை தரிசிக்க வருகின்றனர். இந்தக் கோயிலில் மகா சிவராத்திரி, தீபாவளி, கார்த்திகை சோமவாரம், வசந்த பஞ்சமி, ஹோலி போன்ற பண்டிகைகள், விசேஷ நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக கோயிலின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
விசேஷ நாட்களில் முன்பெல்லாம் 1.5 லட்சம் பேர் வருவார்கள். இப்போது 5 லட்சம் பக்தர்கள் வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி மகாசிவராத்திரி பண்டிகையன்று அதிகபட்சமாக 6.5 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து விஸ்வநாதரை தரிசித்துள்ளதாக கோயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். பக்தர்களுக்காக மேலும் பல வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.