புதுடெல்லி: ஒரு வருடத்தில் பேரக் குழந்தை வேண்டும். இல்லையென்றால் ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என ஹரித்துவார் நீதிமன்றத்தில் தாய் ஒருவர் வழக்கை தொடர்ந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்ட நீதிமன்றத்தில் தாய் ஒருவர் விநோதமான வழக்கை தொடர்ந்துள்ளார். அதில் அவர், ‘எனது மகன் விமான நிறுவனத்தில் விமானியாக உள்ளார். ஆசையாய் வளர்த்த மகனை அமெரிக்காவில் படிக்க வைத்தேன். அவரது எதிர்காலம் கருதி கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி திருமணம் செய்து வைத்து, தேநிலவுக்கு தாய்லாந்து நாட்டிற்கும் அனுப்பி வைத்தேன். அவனது வளர்ப்புகாக இதுவரை ரூ.2 கோடி வரையில் செலவு செய்துள்ளேன். அதில், ரூ.65 லட்சம் மதிப்பிலான ஆடி கார் உட்பட அனைத்தும் அடங்கும். திருமணம் நடந்து பல ஆண்டுகள் ஆகியும் மகனுக்கும், எனது மருமகளுக்கும் குழந்தை இல்லை. அதனால், மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளேன். மேலும், செல்லமாக நான் வளர்த்த மகன், மருமகள் வீட்டாரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறான். மாத சம்பளத்தைக்கூட அவர்களே வாங்கி கொள்கின்றனர். என் மகனுக்கு குழந்தை இல்லாததால், எனது வம்சம் என்னோடு முடிந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. அதனால் எனக்கு ஒரு வருடத்தில் பேரக் குழந்தை வேண்டும். இல்லையென்றால் எனக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்கும்படி மகனுக்கு உத்தரவிட வேண்டும்,’ என தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விரைவில் ஹரித்துவார் மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.