பேரப்பிள்ளை பெற்று தராவிட்டால் ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும்: மகன்-மருமகள் மீது பெற்றோர் வழக்கு

திருமணம் முடிந்த கையோடு மகனிடம் பெற்றோர் கேட்பது ‘சீக்கிரமா ஒரு பேரப்பிள்ளையை பெற்று கொடுடா நாங்கள் கொஞ்சுவதற்கு…’ என்பதுதான்.

திருமண வயதை எட்டும் வரை மகன் படிப்புக்காக, வேலை தேட என்று எல்லாவற்றிற்கும் தங்கள் சேமிப்பு முழுவதையும் செலவு செய்வார்கள். அதன்பிறகு அவர்கள் எதிர்பார்ப்பது மகனின் உதவியைத்தான். ஆனால் அந்த மகன் உதவி செய்யவில்லை. குறைந்தபட்சம் ஒரு பேரக்குழந்தையை கூட பெற்றுக்கொடுக்கவில்லை என்றால் கோபம் வராதா? அப்படி கோபம் வந்த ஒரு தம்பதி இழப்பீடு கேட்டு கோர்ட்டுக்கே சென்றிருக்கிறார்கள்.

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் எஸ்.ஆர்.பிரசாத். இவரது மகனுக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில்தான் எஸ்.ஆர்.பிரசாத் உத்தரகாண்ட் கோர்ட்டில் இழப்பீடு கேட்டு ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது மகனுக்கு வெளிநாடு சென்று படிக்கவும், அமெரிக்காவில் பயிற்சி எடுத்து கொள்ளவும் ஏராளமான பணம் செலவழித்துள்ளேன். இப்போது பணம் எதுவும் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். வங்கி கடன் பெற்று வீடுகட்டி உள்ளேன்.

இப்போது பொருளாதார நெருக்கடியில் மிகவும் சிரமப்படுகிறேன். என் மகனுக்கு திருமணம் செய்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றியும் கவலைப்படவில்லை. எங்களை பற்றியும் கவலைப்படவில்லை.

எனவே இன்னும் ஒரு வருடத்தில் பேரக்குழந்தை பெற்று தரவேண்டும். இல்லாவிட்டால் மகன் 2.5 கோடி, மருமகள் 2.5 கோடியாக மொத்தம் ரூ.5 கோடி இழப்பீடு தரவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருக்கிறார்.

இதுபற்றி வக்கீல் ஸ்ரீவத்சலா கூறும்போது, ‘இந்த வழக்கின் மூலம் நமது சமூகத்தின் முகம் தெரிகிறது. பல பெற்றோர்கள் இப்படித்தான் சொத்து, பணம் எல்லாவற்றையும் பிள்ளைகளுக்காக செலவிடுகிறார்கள். கடைசியில் சிரமத்தை அனுபவிக்கிறார்கள்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.