புதுடெல்லி: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் மிகப்பெரிய அரசியல் சாசன பிழையை செய்துவிட்டார் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடுமையாக குற்றம் சாட்டியது. இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “குடியரசுத் தலைவரும், ஆளுநரும் சட்டத்துக்கு உட்பட்டவர்களே. பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவை எடுக்காவிட்டால் அவரை விடுவிப்பது குறித்து நாங்கள் பரிசீலிப்போம். இதுதொடர்பாக குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டத்துக்குட்பட்டு பேரறிவாளன் விவகாரத்தில் நாங்கள் இறுதி முடிவை எடுப்போம்” என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு அதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் முடிவெடுக்க கடந்த முறை மத்திய அரசுக்கு 2 வாய்ப்புகளை அளித்திருந்தோம். என்ன முடிவு செய்துள்ளீர்கள்? அமைச்சரவையின் முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப அதிகாரம் உள்ளதா” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், “பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் அதற்கான அதிகாரம் 72-வது அரசியல் சாசனத்தின்படி மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. ஒரு வழக்கை எந்த விசாரணை அமைப்பு மேற்கொள்கிறதோ, அதைப் பொறுத்தே முடிவு எடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது தெரியவரும். அதன்படி, ராஜீவ் காந்தி கொலை வழக்கை மத்திய அரசின் புலன் விசாரணை அமைப்புகள் விசாரித்ததால் அதில் நிவாரணம் வழங்கும் அதிகாரமும் மத்திய அரசுக்கே உள்ளது. இதில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இதில் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா அல்லது மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பதை விட்டுவிட்டு ஆளுநருக்கான பிரத்யேக அதிகாரம் 161-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுவிக்க முடியுமா, முடியாதா என வாதிடுங்கள்” என்றனர்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “தமிழக அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தித்தான் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்கும் முடிவை எடுத்தது. அதன்பிறகுதான் மத்திய அரசு இதில் தனக்குத்தான் அதிகாரம் உள்ளது எனக்கூறி தலையீடு செய்து குழப்பத்தை ஏற்படுத்தியது” என் றார்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், “இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன்கீழ் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுவான சட்டப்பிரிவாக இருந்தால் விசாரணை அமைப்பை பொறுத்துதான் அதிகாரமும் வழங்கப்படும்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளில் சிக்கும் நபர்களை விடுவிக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு தனி அதிகாரம் உள்ளதா? அப்படியென்றால் கடந்த 75 ஆண்டுகளில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழான குற்றங்களில் ஈடுபட்டவர்களை ஆளுநர் மன்னித்து விடுவித்தது அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதா? தமிழக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் கடந்த 3 ஆண்டுகளாக முடிவு எடுக்காதது ஏன்? இந்த வழக்கில் ஆளுநருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன்? எந்த விதியின்கீழ் மாநில அரசின் ஆளுநருக்காக மத்திய அரசு வாதிடுகிறது என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். பின்னர், மாநில அரசின் ஆளுநருக்காக மாநில அரசுதான் வாதிட வேண்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி மத்திய அரசு, மாநில அரசு என இரண்டுக்குமே அதிகாரம் உள்ளது” என்றனர்.
தமிழக அரசு வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “மாநில அமைச்சரவை ஒரு முடிவு எடுத்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கும்போது ஆளுநர் அதில் தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை செலுத்த முடியாது. மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் முழுமையாக கட்டுப்பட்டவர். ஒருவேளை அந்த தீர்மானத்தை திருப்பி அனுப்பினால் அது மீண்டும் ஆளுநருக்கே திருப்பி அனுப்பப்படும். இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும்போது என்னென்ன சட்டப் பிரிவுகளின்கீழ் இவ்வாறு செயல்பட தனக்கு அதிகாரம் உள்ளது என்பதை ஆளுநர் ஏன் குறிப்பிடவில்லை. இதை ஆளுநரே சுலபமாக முடித்து வைத்து இருக்கலாம். அதை விட்டுவிட்டு இந்த வழக்கில் குடியரசுத் தலைவரையும் தேவையின்றி இழுத்து விட்டுள்ளார். பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் மிகப்பெரிய அரசியல் சாசனப் பிழையை செய்துவிட்டார்” என குற்றம் சாட்டினார்.
அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு தரப்பில் மேற்கொண்டு ஏதேனும் வாதங்கள் இருந்தால் அதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறி்ப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.