போலீசார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு வீசப்பட்ட சம்பவம்- 4 பேர் கைது

கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் போலீஸ் சரகம் பெரியக்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலை 1,700 பரப்பளவை கொண்டது.

அங்கு பெரிய இரும்பு தளவாடங்கள், காப்பர் கம்பிகளை கொண்டு தொழிற்சாலை அமைக்கும் முயற்சி தொடங்கப்பட்டது. பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது தானேபுயல் கடுமையாக தாக்கியது. இந்த புயலின் கோரபிடிக்கு தாக்குபிடிக்க முடியாமல் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. அதன் பின்னர் அந்த கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது.

எனினும் இந்த தொழிற்சாலையில் இரும்பு பொருட்கள், காப்பர் கம்பிகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. இதனை காவலாளிகள் இரவு பகல் பாராமல் கண்காணித்து வந்தனர்.

ஆனாலும் மர்ம கும்பல் யாருக்கும் தெரியாமல் தொழிற்சாலைக்குள் புகுந்து அடிக்கடி இரும்பு பொருட்களை திருடி வந்தனர். கடந்த மாதம் ஏராளமானோர் தொழிற்சாலைக்குள் புகுந்து பொருட்களை திருடினர். இதுபற்றி அடிக்கடி புதுசத்திரம் போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டனர். மேலும் டிரோன் கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டது. இது தவிர போலீசாரும் ரோந்து பணியில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் இந்த தொழிற்சாலையில் மர்ம கும்பல் திருடுவதாக ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் புதுசத்திரம் போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். உஷாரான கொள்ளையர்கள் ரோந்து சென்ற  போலீசார் மீது 6 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பினர்.

அப்போது போலீசார் லாவகமாக தப்பினர். என்றாலும் மண் தரையில் விழுந்து 3 பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து புதுசத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து போலீசார் மீது வெடிகுண்டு வீசி தப்பிய மர்ம கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில் பெரியகுப்பம் பகுதியில் போலீசார் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்ட  சம்பவத்தில் ஈடுபட்ட ஜெகதீசன் (47), விஜய் (25), நற்குணன் (50), பிரபாகரன் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள 6 பேரை புதுச்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.