பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இந்தூர் விடுத்துள்ள அறிக்கையில், “திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டிற்கு வழங்கபட வேண்டிய நிதி உதவியை, கூடுதல் கையூட்டு கொடுத்தால் தான் வழங்குவேன் என்று அதிகாரி கொடுமைப்படுத்தியதால், விரக்தியடைந்த இளைஞர் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம், வேலங்குடி ஊராட்சிக்குட்பட்ட கமுதகுடியைச் சேர்ந்த லதா என்பவர் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்வதற்காக விண்ணப்பம் செய்தார். அவர் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர் வீடு கட்ட அரசு நிதி வழங்க வேண்டும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி தரமான வீடு கட்ட போதுமானதாக இருக்காது என்பதால், அத்துடன் பயனாளிகள் தங்களின் சொந்த பணத்தையும் சேர்த்து வீடு கட்டுவர்.
வீடுகளை கட்டும் போது கட்டுமானப் பணிகள் எந்த அளவுக்கு நிறைவடைந்திருக்கின்றன என்பதை ஆய்வு செய்த பிறகு நான்கு கட்டங்களாக அரசின் நிதியுதவி வழங்கப்படும். லதாவின் வீடு கட்டும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட நிதியுதவியை வழங்கும்படி அப்பகுதியின் பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரனிடம் லதாவின் மகன் லெ.மணிகண்டன் கோரியிருக்கிறார். ஆனால், இல்லாத காரணங்களைக் கூறி மூன்றாம் கட்ட நிதியுதவியை வழங்க மகேஸ்வரன் மறுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ரூ.5,000 கூடுதல் கையூட்டு வழங்கினால் தான் நிதியுதவி வழங்க முடியும் என்று கூறி மணிகண்டனை மகேஸ்வரன் மனதளவில் கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார். அதனால், மன வேதனை, விரக்திக்கு ஆளான மணிகண்டன் நஞ்சு குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அரசு நிர்வாகத்தில் புரையோடியுள்ள ஊழல் மனிதர்களையும் பலி வாங்கும் என்பதற்கு இந்த நிகழ்வு தான் வேதனையான எடுத்துக்காட்டு ஆகும். மணிகன்டன் பாட்டாளி மக்கள் கட்சியின் உண்மையான தொண்டர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். சொந்த வீடு என்பது அவரது கனவு. அதனால் தான் அதற்காக பாடுபட்டுள்ளார். வீடு கட்டுவதற்காக அவர் கடன் வாங்கித் தான் செலவு செய்துள்ளார். முதல் இரு தவணைகளில் ரூ.52 ஆயிரம் மட்டுமே பெற்றுள்ளார். அதற்காக பணி மேற்பார்வையாளருக்கு ரூ.18,000 கையூட்டு கொடுத்துள்ளார். இது உதவியாக பெற்றதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்.
மூன்றாவது கட்ட பணிகளை மேற்கொள்ள நிதியில்லாத நிலையில், பிழைப்புத் தேடி வெளிநாட்டிற்கு செல்வதற்காக வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை செலவு செய்துள்ளார். இது தவிர நண்பர்களிடமிருந்து பல்லாயிரம் ரூபாயை கடன் வாங்கியும், ரூ.36 ஆயிரத்திற்கு கம்பியை கடன் வாங்கியும் வீட்டிற்காக முதலீடு செய்துள்ளார். மூன்றாம் கட்ட நிதியுதவி வந்து விட்டால் நிலைமையை சமாளித்து விடலாம் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால், பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரன் கையூட்டு பெறுவதிலேயே குறியாக இருந்ததால் மணிகண்டனின் நம்பிக்கை நிறைவேறவில்லை. அவர் மனம் உடைந்து விட்டார்.
ஒரு புறம் வீடு கட்டும் கனவு கலைகிறது… மறுபுறம் வெளிநாடு செல்வதற்கான பணம் செலவானதால் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது, மூன்றாவது புறம் கடன் சுமை அதிகரித்து விட்டது. இச்சுமைகள் தாங்க முடியாமல் தான் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார். அரசு வழங்கும் உதவிகளை மக்களுக்கு கொடுப்பதற்கு கூட அரசு அதிகாரிகள் இடைத்தரகர்களை விட கொடூரமாக செயல்பட்டு பணம் பிடுங்குவதால் தான் மணிகண்டன் போன்றவர்கள் வாழ முடியாமல் தற்கொலை செய்கின்றனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை விளக்கி மணிகண்டன் வெளியிட்டுள்ள காணொலி தாங்க முடியாத வேதனையளிக்கிறது. இத்தகைய நிலை இனி எவருக்கும் ஏற்படக்கூடாது. அதேநேரத்தில் மணிகண்டனை போன்ற அனைவருக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு இல்லை என்பது தான். ஊழல் உள்ளிட்ட அனைத்து தீமைகளையும் போராடித் தான் முறியடிக்க வேண்டுமே தவிர, தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. தற்கொலையால் உங்களின் குடும்பம் பாதிக்கப்படுமே தவிர எந்த நன்மையும் விளையாது. உங்களின் பிரச்சினைகளைத் தீர்க்க களமிறங்கி போராடுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் தயாராகவே இருக்கிறது.
அரசு நிர்வாகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஊழலை ஒழிக்காமல் அடித்தட்டு மக்களின் வீட்டுக்கனவை நிறைவேற்ற முடியாது. மணிகண்டனின் தற்கொலைக்கு மகேஸ்வரன் மட்டும் காரணமல்ல… அவர்களை உருவாக்கும் அரசு நிர்வாக முறையும் தான் காரணமாகும். மணிகண்டனின் தற்கொலைக்கு காரணமான பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டும் போதாது. அவரை உடனே கைது செய்ய வேண்டும். மணிகண்டனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.