ஸ்காட்லாந்துக்கு சென்றுள்ள பிரித்தானிய இளவரசரும் வருங்கால மன்னருமான இளவரசர் வில்லியம், ராஜ மரபுகளை மீறி செய்த ஒரு செயலைக் கண்ட மக்கள் ஆச்சரியத்தில் திளைத்தனர்.
பிரித்தானிய மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலிக் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், இளவரசர் வில்லியமும், அவரது மனைவி கேட்டும் ஸ்காட்லாந்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்கள்.
அப்போது, வீடற்றவர்கள், எளிதில் ஆபத்துக்குள்ளாகும் நிலையில் உள்ளவர்கள் ஆகியோருக்கு மறுவாழ்வு கொடுக்கும் Wheatley Group என்ற அமைப்புக்கு வருகை புரிந்தார்கள் வில்லியமும் கேட்டும்.
அப்போது வருங்கால மன்னரை சந்தித்ததால் உணர்ச்சிப்பெருக்கிட நின்றிருந்த William Burns (66) என்பவரை அன்புடன் கட்டியணைத்துக்கொண்டார் இளவரசர் வில்லியம். அப்போது அந்த வில்லியம் மட்டுமின்றி, அந்தக் காட்சியைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திளைத்தார்கள்.
அதற்கு முக்கியக் காரணம், ராஜ குடும்பத்தினரை யாராவது முதுகில் தொட்டாலே அது பெரிய பிரச்சினையாக பேசப்படும். ஒரு முறை, அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப், பிரித்தானிய மகாராணியாரை சந்திக்கும்போது சகஜமாக அவரது முதுகைத் தொட்டது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
ஆனால், வில்லியமையும் கேட்டையும் பொருத்தவரை, அவர்கள் எளிமையாக இருக்க விரும்புகிறார்கள். சொல்லப்போனால், தங்கள் பதவியைப் பயன்படுத்தி Duke and Duchess of Cambridge என்றெல்லாம் தங்களை அழைக்கவேண்டாம், Wills மற்றும் Kate என்று அழைத்தால் போதும் என்றும், தங்கள் முன் தலைகுனிந்து மரியாதையெல்லாம் செலுத்தவேண்டாம் என்றும் அவர்கள் விரும்புகிறார்களாம்.
என்னை வில்ஸ் என்று கூப்பிட்டால் போதும் என்கிறாராம் இளவரசர் வில்லியம்.
இன்னொரு விடயம், இளவரசர் வில்லியம் மற்றும் கேட்டுடைய இந்த எளிமையைப் பார்ப்பவர்கள், வில்லியமுடைய தாயாகிய இளவரசி டயானாவை நினைவுகூருகிறார்களாம்!