புதுடெல்லி: தேசத் துரோக சட்டப்பிரிவை (124-ஏ) மத்திய அரசு மறுபரிசீலனை செய்வதால், அந்த சட்டப்பிரிவின் கீழ் மத்திய, மாநில அரசுகள் வழக்குப்பதிவு செய்யவும், விசாரணைகளை தொடரவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேசத் துரோக சட்டப் பிரிவு செல்லுபடியாகும் என கேதர்நாத் வழக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 1962-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதால், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோலி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது.
அப்போது, பல மாநில அரசுகள் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துவதால், இந்த சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை, தேசத் துரோக சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வதை நிறுத்தி வைக்கலாமா என கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து மத்திய அரசிடம் கேட்டு பதில் அளிப்பதாக, சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்திருந்தார். அதன்படி உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் அளித்த அவர் கூறியதாவது:
தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும்வரை, அதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களின் மீதான விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும். 124-ஏ குற்ற வழக்குப்பிரிவு என்பதால், அதன் கீழ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்வதை தடுக்க முடியவில்லை.
தனிநபர்கள் மீது இந்த வழக்கை பதிவு செய்யும் முன், அது தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும். 124-ஏ பிரிவின்கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணைக்கு ஒட்டுமொத்த தடை விதிக்கக் கூடாது. சிலர் தீவிரவாதம் அல்லது நிதி மோசடி குற்றச்சாட்டில் ஈடுபட்டிருக்கலாம். நிலுவையில் உள்ள வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், நிவாரணம் பெற நீதிமன்றங்களை அணுகலாம். இவர்களின் ஜாமீன் மனுக்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும். தேசத் துரோக சட்டப் பிரிவு மறுபரிசீலனை செய்யப்படும் வரை, நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், 124-ஏ சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
அதன்பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
சமீபத்தில் அனுமன் துதி பாடியவர்கள் மீதும், 124-ஏ பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்வது முடிவடைய வேண்டும் எனவும், அதுவரை இந்த சட்டப்பிரிவை பயன்படுத்தக் கூடாது எனவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். நீதியை நிலைநாட்டுவதற்காக இந்த சட்டப்பிரிவு மறுபரிசீலனை செய்யப்படுவதால், இதன் பயன்பாட்டை நிறுத்திவைக்க வேண்டியுள்ளது.
மாநிலத்தின் பாதுகாப்பு, மக்களின் சுதந்திரம் இரண்டையும் சமநிலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதால், இது சிக்கலான பணி. தேசத்துரோக சட்டப்பிரிவின் கீழ் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம்.
இந்த வழக்கில் மேல் முறையீடுகள் தற்போதைக்கு நிறுத்திவைக்கப்பட்ட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப செயல்படும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கு ஜூலை 3-வது வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தேசத்துரோக சட்டப்பிரிவு மறுபரிசீலனை செய்வது மிக நீண்ட பணி என்பதால், இந்த சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய காலவரம்பை உச்ச நீதிமன்றம் வழங்கவில்லை.