சென்னை: மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமான ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுதுதலே நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான இந்த திட்டத்திற்கு தேவையான அதிகாரிகளை நியமிக்கும் பணி தொடங்கியது. தமிழக திறன் மேம்பாட்டு கழகம் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தலைமைச் செயல் அதிகாரி, துணைத் தலைவர்கள், உதவி துணைத் தலைவர், திட்ட மேலாளர் உள்ளிட்ட 12 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வெளியிட்டுள்ளது.