வர்ஷா ஸ்ரீராம்
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களிடையே அத்துமீறி நடந்துகொள்ளும் வீடியோக்கள் வெளியாகி, மாநிலத்தில் பேசும் பொருளாக மாறியது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தவறாக நடந்துகொள்ளும் மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என கூறியிருந்தார். மேலும், டி.சி.,யில் மாணவர்கள் வெளியேற்றப்படுவதற்கான காரணமும் குறிப்பிடப்படும் என எச்சரித்திருந்தார்.
கடந்த சில வாரங்களாக, மாணவர்கள் ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொள்ளும் வீடியோக்கள், பள்ளிச் சொத்துகளை சேதப்படுத்துவது போன்ற வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
இது குறித்து பேசிய அமைச்சர், மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டுவரக்கூடாது. மீறி கொண்டு வந்தால், செல்போன் பறிமுதல் செய்யப்படும். குழந்தைகளின் ஆளுமையை வளர்ப்பதில் பெற்றோருக்கு முக்கிய பங்கு உண்டு. மாணவர்களிடையே நல்ல நடத்தையை உறுதி செய்ய ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
ஆனால், அமைச்சரின் பேச்சுக்கு பல கல்வியாளர்களும், குழந்தைகள் உரிமை ஆர்வலர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அமைச்சர் கூறியிருப்பது அநியாயம் என விமர்சித்துள்ளனர்.
மாணவர்களை பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது அவர்களின் எதிர்காலத்தை அழித்துவிடும் என தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் (டிஎன்சிஆர்டபிள்யூ) வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
டிஎன்சிஆர்டபிள்யூ அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு முயற்சிகளையும் திட்டங்களையும் வகுத்துள்ளது. இருப்பினும், சமீபத்திய அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தவறாக நடந்துகொள்ளும் மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்குவது, அவர்களது தற்போதைய வாழ்வில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டு வராது. டிசி மற்றும் நடத்தைச் சான்றிதழுடன் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டால், அவர்களது எதிர்காலம் நாசமாகிவிடும் என தெரிவித்தார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய TNCRW கன்வீனரும் குழந்தை உரிமை ஆர்வலருமான ஆண்ட்ரூ சேசுராஜ், ஆசிரியர்களிடம் தவறாக நடந்து கொள்ளும் மாணவர்களும் இருப்பது உண்மை தான். ஆனால், அவர்களை இப்படி தண்டிப்பதால் பிரச்னை தீர்ந்துவிடாது. உண்மையில், இது விஷயங்களை மோசமாக்கும்” என்றார்.
மேலும், அந்த கடிதத்தில், இந்தக் குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. அரசாங்கம் இப்போது பரிந்துரைப்பது ஒரு விலக்கு அணுகுமுறையாகும். இது ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களைப் பாதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவும், மாணவரை பள்ளியில் இருந்து நீக்கி, டிசியில் குறிப்பிடுவது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கிவிடும் என நம்புவதாக தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இந்த நடவடிக்கை இளம் வயது குழந்தைகளிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்ததாது. டிசி, பள்ளிகளில் சேர்க்கையைப் பெறுவதற்கான மாணவர்களின் கல்வித் திறனின் முக்கிய ஆவணமாகும். இது எதிர்காலத்தில் சான்றிதழாகப் பயன்படுத்தப்படுகிறது. பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை பிராசஸூக்கும் பயன்பெறலாம். TC யில் பிளாக் மார்க் வருவது, மாணவனின் எதிர்காலத்தை பாதிக்கும்.
ஒரு சில மாணவர்களின் தவறுகளால் வெளியிடப்பட்ட அறிவிப்பு நியாயமற்றது. தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் இரண்டு கோடி மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களின் 10 வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அவற்றை வைத்து க, அனைத்து குழந்தைகளின் வாழ்க்கையையும் எவ்வாறு நாம் பொதுமைப்படுத்தி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட முடியும்? என கேள்வி எழுப்பினார்.
ஆண்ட்ரூ சேசுராஜ், கஜேந்திர பாபு இருவரும் கோவிட்-19 தொற்றுநோய் காலம் குழந்தையின் நடத்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நம்புகிறார்கள்.
கஜேந்திர பாபு கூறுகையில், “இந்த நடத்தையை தனித்தனியாக பார்க்க முடியாது. தொற்றுநோயின் ஒட்டுமொத்த விளைவுகளாக தான் பார்க்க முடியும். ஊரடங்கில், ஒரு குழந்தை உணர்ச்சி, உடல் அல்லது சில வகையான துஷ்பிரயோகம், சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கலாம். அது அவர்களுக்கு உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை நாம் அறியாமல் இருக்கலாம்” என்றார்.
என்ன செய்யலாம்?
சேசுராஜ் கூறுகையில், மாணவர்களை கட்டுப்படுத்தாமல், அவர்களின் திறமையையும், தலைமையையும் நிரூபிக்கும் வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அது தான், தவறாக நடந்துகொள்ளும் மாணவர்களைக் கையாள்வதற்கான சிறந்த வழி. தூக்கி எறிவதற்குப் பதிலாக, அறிவுரை வழங்க வேண்டும். ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் மாற்று சிகிச்சைகள் ஆகியவை நிச்சயம் வேலை செய்யும். மாணவர்களிடையே மாற்றத்தை கொண்டு வரும் என்றார்.
கஜேந்திர பாபு கூறுகையில், குழந்தையை தனிமைப்படுத்துவதற்கு பதிலாக, அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பதை கண்டறிய வேண்டும். . ஒரு மாணவர் அகங்காரமாக இருந்தால், ஒரு ஆசிரியரும் அகங்காரமாக இருக்கக்கூடாது. குழந்தையை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்வதற்கு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என கூறுகிறார்.