கொச்சி:
கேரளா மாநிலத்தில் ஆளும் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சியும் உள்ள நிலையில், திருக்காக்கரா இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கூட்டணி வேட்பாளராக டாக்டர் ஜோ ஜோசப் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து கொச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் எல்டிஎஃப் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் அதே மேடையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.வி. தாமஸ்-ம் கலந்து கொண்டது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த கூட்டத்தில் கே.வி.தாமஸ் பேசியதாவது:
நாங்கள் மக்களுடன் நிற்கிறோம். காங்கிரஸின் மென்மையான இந்துத்துவ அணுகுமுறை நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும். நான் ஒரு காங்கிரஸ்காரனாக இங்கே நிற்கிறேன். எல்.டி.எஃப் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வலிமையான ஆட்சியாளர்களால் மட்டுமே மாநிலத்தை நெருக்கடியின் போதும் வழிநடத்த முடியும். பினராயி விஜயனால் அதை செய்ய முடியும்.
பினராயி விஜயன் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தால் அதை எதிர்ப்போம் என்பது காங்கிரஸின் அணுகுமுறை. கேரளாவில் அந்த அணுகுமுறை சரியில்லை. நான் கொச்சி மற்றும் திருக்காக்கரா வளர்ச்சி திட்டங்களை ஆதரிக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக திருக்காக்கரா இடைத்தேர்தலில் மார்க்சிஸ் கூட்டணி
வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்ற போவதாக கே.வி.தாமஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் மார்க்சிஸ்ட் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கேரளா பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. சுதாகரன் அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…
தமிழகம் உள்பட காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10-ம் தேதி மாநிலங்களவைத் தேர்தல்