சென்னை: தமிழக மின்சார வாரியத்துக்கு சென்னை மாநகராட்சி செலுத்த வேண்டிய கட்டணத்தை, நில வாடகை கழித்து, மீதமுள்ள தொகையை, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை செலுத்த, மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி அலுவலகங்கள், தெரு விளக்குகள் போன்றவற்றிற்கு, ஆண்டுக்கு, 45.5 கோடி ரூபாய் செலவில், மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், அலுவலகம், மின்மாற்றி உள்ளிட்டவைகளுக்கு, மாநகராட்சியின் நிலத்தை, தமிழக மின்சார வாரியம் பயன்படுத்துகிறது. இதற்காக ஆண்டுதோறும், 35 கோடி ரூபாயை மாநகராட்சிக்கு, மின்சார வாரியம் வாடகையாக செலுத்த வேண்டும்.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளாக மின்சார வாரியத்துக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை சென்னை மாநகராட்சி செலுத்தாமல் இழுத்தடிப்பு செய்து வந்தது. அதேபோல், மாநகராட்சிக்கான வாடகையை மின்சார வாரியம் செலுத்தாமலும், காலம் தாழ்த்தி வந்தது.
அதன்படி, மின்சார கட்டணமாக 178 கோடி ரூபாய் ஆகவும், நில வாடகை கட்டணமாக 140 கோடி ரூபாயாகவும் அதிகரித்தது. இதனால், இரு அரசு துறைகளும் மாறி, மாறி, வட்டியுடன் கட்டணத்தை செலுத்த வேண்டும் என ஒரு மாதமாக பேச்சு வார்த்தை நடந்தது.
குறிப்பாக, மின் கட்டணத்துக்கு வட்டியுடன் செலுத்த வேண்டும் என மின் வாரியமும், மின் கட்டணத்துக்கு வட்டி போட்டால், வாடகைக்கு வட்டி போடப்படும் என மாநகராட்சியும் தெரிவித்தது. நான்கு ஆண்டுகளாக நடந்து வந்த பிரச்னைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,” தமிழக மின் வாரியம், சென்னை மாநகராட்சியின் மேல் மட்ட அதிகாரிகள் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், எவ்வித வட்டியும் இல்லாமல், இருக்கும் நிலையிலே கட்டணத்தை செலுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி, நில வாடகையை கழுத்தால், மின் வாரியத்துக்கு, 38 கோடி ரூபாயை மாநகராட்சி அளிக்க வேண்டும். அத்தொகையை தர மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது. இதைதவிர, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, மாநகராட்சிக்கான நிலவாடகையை கழித்து, மீதமுள்ள மின் கட்டண தொகையை செலுத்த வேண்டும் என, மண்டல வாரியாக உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.