திருவனந்தபுரம்: கர்நாடக மாநிலம் மைசூரு ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஷாபா செரீப் (60). நாட்டு வைத்தியர். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர்கள் மைசூரு போலீசில் புகார் செய்திருந்தனர். இந்த நிலையில் வைத்தியர் ஷாபா செரீப்பை கேரள மாநிலம் நிலம்பூரை சேர்ந்த தொழிலதிபரான ஷைபின் அஷ்ரப் என்பவரின் தலைமையிலான கும்பல் கடத்திக் கொலை செய்தது தெரியவந்தது. வைத்தியர் ஷாபா செரீபை ஷைபின் அஷ்ரப் மைசூருவில் இருந்து கடத்தி தனது வீட்டில் 15 மாதம் அடைத்து வைத்து சித்ரவதை செய்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசி உள்ளனர். நாட்டு வைத்தியரான ஷாபா செரீப்பின் வைத்திய ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காகவே இந்த கொடூர செயலில் அவர் ஈடுபட்டார் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்தக் கொலை தொடர்பாக ஷைபின் அஷ்ரப், அவரது கூட்டாளிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தொழிலதிபர் ஷைபின் அஷ்ரப் குறித்து தனிப்படை நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளன. இவர் குறுகிய காலத்திலேயே ₹ 500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இவருக்கு எப்படி இந்த அளவுக்கு சொத்து சேர்ந்தது என்பது மர்மமாக உள்ளது. எனவே தீவிரவாத அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கேரளாவைச் சேர்ந்த சில தொழிலதிபர்கள் உள்பட 5 பேரை கொலை செய்ய அவர் திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்களும் போலீசுக்கு கிடைத்து உள்ளன. இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.