இந்தியாவில் உள்ள புனித தலங்களில் முக்கியமான நகரம் உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் இங்குள்ள சிவனை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவது வாடிக்கையான ஒன்று.
பனி காலத்தில் பக்தர்கள் வருகை குறைவாக இருக்கும் அதே நேரத்தில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
கோடை காலத்தில் வெயிலுக்கு இதமாக இமய மலையில் உள்ள மந்தாகினி ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் இந்த சிவனை தரிசிக்க மே மாதம் முதல் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டு மே 6 ம் தேதி முதல் கட்டுக்கடங்காத கூட்டம் கேதார்நாத்துக்கு புனித யாத்திரை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
10,000 பேர் மட்டுமே தங்கும் அளவுக்கு இட வசதி இருந்த போதும் இங்கு சுமார் 20,000க்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நிலச்சரிவுகளும், பனிச்சரிவால் திடீர் வெள்ளமும் ஏற்பட கூடிய பகுதி என்பதால் பக்தர்கள் கூட்டத்தை இன்னும் ஐந்து மாதங்கள் எப்படி சமாளிப்பது என்று திணறி வருகிறது உள்ளாட்சி நிர்வாகம்.
ஏற்கனவே 2013 ம் ஆண்டு இங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிக்கித் தவித்த நிலையில், ராணுவத்தின் உதவியுடன் பல்லாயிரக்கணக்கானவர்கள் மீட்கப்பட்டனர். 2004 சுனாமி பேரழிவுடன் ஒப்பிடப்படுகிறது இந்த நிகழ்வு.