மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க தெப்பக்குளத்தில் இருந்து நேரடியாக மருத்துவமனைக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்கு ரூ.1.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் மாநகராட்சி நிர்வாகம் குழாய்களை பதிக்கும் பணியை தொடங்க இருக்கிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கன்னியாகுமரி தொடங்கி தென் தமிழகத்தை சேர்ந்த 10 மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுகிறார்கள். ஒரு நாளைக்கு 13 ஆயிரம் வெளிநோயாளிகளும், 3,500 உள் நோயாளிகளும் சிகிச்சைக்கு வருகிறார்கள். அவர்களுடன் வரும் பார்வையாளர்கள், உறவினர்கள், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் உள்பட ஒரு நாளைக்கு தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்திற்குள் வந்து செல்கிறார்கள்.
ஆனால், அவர்கள் அனைவரும் பயன்படுத்தும் அளவிற்கு மருத்துவமனையில் தண்ணீர் இல்லை. குடிநீர், கழிப்பிட அறைகள், நோயாளிகளின் துணிகளை துவைக்கும் சலவை கூடங்கள், சிகிச்சை அரங்குகள், வார்டுகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், மருத்துவமனை வளாகத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள், மாநகராட்சி குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் வெறும் 8 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. அது போதுமானதாக இல்லை. மீதி தண்ணீரை அரசு மருத்துவமனை நிர்வாகம், மாநராட்சியிடம் இருந்து லாரிகளில் இருந்து கட்டணம் அடிப்படையில் 12 லட்சம் லிட்டர் தண்ணீர் வாங்குகிறார்கள்.
மாநகராட்சி நிர்வாகம் அந்த தண்ணீரை லாரிகளில் கொண்டு வந்து மருத்துவமனைக்கு வழங்குகிறார்கள். சில நேரங்களில் லாரி தண்ணீர் விநியோகம் தடைப்படும்போது மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். அப்போது நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவப்பணியாளர்கள் பெரும் சிரமப்படுவார்கள். கழிப்பிட அறைகளையும், நோயளிகள் குளியல் அறைகளையும் சரியாக பராமரிக்க முடியாமல் துர்நாற்றம் வீசும். நோயாளிகளுடைய துணிகளையும் துவைப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால், மருத்துவமனை தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க நிரந்தர நடவடிக்கையாக மருத்துவமனை நிர்வாகம், தெப்பக்குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
”தெப்பக்குளத்தில் இருந்து நேரடியாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அதற்காக மாநகராட்சியிடம் மருத்துவமனை நிர்வாகம் ரூ.1.35 கோடி வழங்கிவிட்டது. குழாய் மூலம் நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டால் எதிர்காலத்தில் கூட மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்காது. வைகை ஆற்று தண்ணீரை கொண்டு நிரந்தரமாக தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்கப்படுவதால் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அதேநேரத்தில் தெப்பக்குளத்திலும் நீர் ஆதாரம் இருக்கும்படி மாநகராட்சி பார்த்துக் கொள்ள வேண்டும். விரைவில் தெப்பக்குளத்தில் இருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு குழாய் பதிக்கும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது”
இவ்வாறு அவர் தெரிவித்தார்