புதுடெல்லி: சண்டிகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணம் பறிப்பதற்காக போலி ரெய்டு நடத்திய வழக்கில் நான்கு சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். 4 பேரையும் டிஸ்மிஸ் செய்ய சிபிஐ இயக்குனர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். சண்டிகரை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் அலுவலகத்திற்கு கடந்த 10ம் தேதி டெல்லியை சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் 4 பேர் வந்தனர். அவர்களுடன் வேறு சிலரும் வந்தனர். தொழிலதிபருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளன. இதனால், அவரை கைது செய்வோம் என்று சிபிஐ அதிகாரிகள் மிரட்டினர். பின்னர், வலுக்கட்டாயமாக ஒரு காரில் அழைத்து சென்று அவரிடம் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர்.இதில் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் டில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் புகார் செய்தார். இது குறித்து சிபிஐ உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியது சுமித் குப்தா, பிரதீப் ராணா,அங்குர் குமார் மற்றும் அகாஷ் அகலவாத் ஆகிய 4 சப் இன்ஸ்பெக்டர்கள் என்பது தெரிந்தது. அவர்களின் அலுவலக அறைகளில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, நான்கு அதிகாரிகளையும் சிபிஐ நேற்று கைது செய்தது. மேலும், 4 பேரையும் பணியில் இருந்து நீக்கி சிபிஐ இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.