12.5.2022
18:00: உக்ரைனின் கீவ் நகரில் ரஷிய படைகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பான விசாரணையைத் தொடங்குவது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் இன்று முடிவு செய்ய உள்ளது. இது தொடர்பாக 50 நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
16:00: நேட்டோவில் இணையும் பின்லாந்தின் முயற்சியானது, ரஷியாவிற்கு அச்சுறுத்தல் என்றும், ராணுவ கூட்டணியை அதிகரிப்பதால் ஸ்திரத்தன்மை ஏற்படாது என்றும் கிரெம்ளின் மாளிகை கூறி உள்ளது.
14.39: உக்ரைனுக்கு எதிரான போரில் கைது செய்யப்பட்ட 21 வயது ரஷ்ய வீரருக்கு எதிராக முதல் போர் குற்ற விசாரணையை உக்ரைன் தொடங்கவுள்ளது. வாடிம் ஷிஷிமரின் என்ற பெயர் கொண்ட அந்த வீரர், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி 62 வயது முதியவர் ஒருவரை காரில் வைத்து சுட்டுகொன்றார். பிறகு அந்த பக்கமாக சைக்கிளில் சென்ற இளைஞரையும் சுட்டு வீழ்த்தினார். இந்த குற்றச்சாட்டில் ஆயுதம் இல்லாத பொதுமக்களை கொன்றதற்காக அவர் மீது விசாரணை நடத்தப்படவுள்ளது.
12.30: ரஷ்ய படைகள் உக்ரைன் மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ள நிலையில், உக்ரைன் வீரர்கள் அங்குள்ள உருக்கு ஆலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களில் செர்ஹி வோல்யானா என்பவர் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்கை ட்விட்டர் மூலம் தொடர்பு கொண்டார்.
அவர், ‘நீங்கள் வேறு கிரகத்தில் பிறந்து பூமிக்கு வந்ததாக மக்கள் கூறுவர். நான் வாழும் கிரகத்தில் பிழைத்திருப்பது கடினமாக உள்ளது. உருக்கு ஆலையில் இருந்து நாங்கள் தப்பிக்க உதவுங்கள். நீங்கள் இல்லையெனில் யார் உதவுவார்கள்?’ என கேட்டுள்ளார்.
09.45: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து, ஃபின்லாந்து, ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் இணைவது குறித்து ஆலோசித்து வந்தன. இந்நிலையில் இன்று ஃபின்லாந்து நேட்டோவில் இணைவது குறித்து அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து ஸ்வீடனும் கூடிய விரைவில் இணைவது குறித்து அறிவிக்க உள்ளது.
நேட்டோ படைகள் ஓர் ஆண்டுக்கு தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நார்வே, டென்மார்க், பால்டிக் நாடுகள் நேட்டோவில் இடம்பெற்றுள்ள நிலையில், ஸ்வீடன், ஃபின்லாந்து இணைப்பு நார்டிக் பகுதியை வலுப்படுத்தும் என அந்நாடுகள் கருதுகின்றன.
06.45: உக்ரைனில் நீண்ட போருக்கு ரஷிய அதிபர் புதின் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமாகி வரும் நிலையில், அந்தப் பிரதேசத்தை முழுமையாகக் கைப்பற்ற ரஷியா முயற்சிக்கிறது, கிழக்கில் வெற்றி பெற்றாலும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர முடியாது என அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் அவ்ரில் ஹெய்ன்ஸ் எச்சரித்துள்ளார்.
03.45: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் புதின் பற்றி போலந்து பிரதமர் மேட்யூஸ் மொராவீக்கி தி டெலகிராப் பத்திரிகையில் கட்டுரை எழுதி உள்ளார்.
புதின் ஹிட்லரும் அல்ல, ஸ்டாலினும் அல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மிகவும் ஆபத்தானவர். உக்ரைனில் புச்சா, இர்பின், மரியுபோல் நகரங்களின் தெருக்கள் அப்பாவி மக்களின் ரத்தத்தால் ஓடின. இது ஸ்டாலின், ஹிட்லரின் சபிக்கப்பட்ட சித்தாந்தங்கள் திரும்புவதைக் குறிக்கிறது என கூறியுள்ளார்.
00.45: போரினால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்ந்து ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் ராணுவம் பல்வேறு இடங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவை அந்நாட்டு ராணுவம் மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
ஏற்கனவே, மரியுபோல் நகரத்தை உக்ரைன் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.