வட கொரியாவிலும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்| Dinamalar

சியோல்:வட கொரியாவில், கொரோனா வைரஸ் பரவத் துவங்கி உள்ளது முதல்முறையாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைஅடுத்து, நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.கடந்த 2020ல், கொரோனா தொற்று உலகம் முழுதும் பரவத் துவங்கியபோது, கிழக்காசிய நாடான வட கொரியாவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நாட்டின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து வட கொரிய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் மக்களை சுட்டு வீழ்த்தவும், அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டதாக கூறப்பட்டது.
இத்தகயை கடும் நடவடிக்கைகள் பெரும் பலனளித்ததாகவும், நாட்டில் கொரோனா தொற்றே கிடையாது என்றும், வட கொரியா அந்த சமயத்தில் தெரிவித்திருந்தது.இந்நிலையில், வட கொரியாவில், கொரோனா வைரஸ் பரவத் துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், ‘ஒமைக்ரான்’ வகை வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 2.6 கோடி மக்கள் தொகை உடைய வட கொரியாவில், பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து, அதிபர் கிம் ஜாங் உன் மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். முக கவசம் அணிந்த கிம்மின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இக்கூட்டத்திற்கு பின், நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக, அதிபர் கிம் அறிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.