ஞானவாபி மசூதியில் வீடியோ பதிவுகளுடன் கள ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இந்த மசூதியின் பாகங்கள் இந்து கோவில் முறைப்படி, இந்து கட்டட அமைப்புகளுடன் உள்ளது என்று சர்ச்சைகள் அடிக்கடி எழுந்து வந்தது.
இது சம்பந்தமாக வழக்கும் நடந்து வருகிறது. குறிப்பாக ஞானவாபி மசூதி சுற்றுச்சுவரில் அமைந்துள்ள சிங்கார கௌரி அம்மன் சிலைக்கு தினமும் பூஜை நடத்துவதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு அளிப்பட்டு உள்ளது.
இதில் ஞானவாபி மசூதியில் ஆய்வும் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மசூதியில் வீடியோ பதிவுகளுடன் கள ஆய்வு செய்ய அஜய் குமார் மிஸ்ரா தலைமையில் குழு ஒன்றை நீதிமன்றம் நியமித்து இருந்தது.
இந்த ஆய்வு நடத்துவதற்கு மசூதி நிர்வாகம் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் கள ஆய்வு நடத்த முடியவில்லை என்று, அஜய் குமார் மிஸ்ரா வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் அஜய் குமார் மிஸ்ராவை மாற்றவேண்டும் என்று மசூதி நிர்வாகம் சார்பில் மனு வழங்கப்பட்டிருந்தது
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், அஜய் குமார் மிஸ்ராவை மாற்ற முடியாது என்றும், மசூதியை கள ஆய்வு செய்து, வருகின்ற 17 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.