வால்பாறை அருகே குடியிருப்புப் பகுதியில் மர்மமான முறையில் ஆண் சிறுத்தைப்புலி உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து வனத்தைவிட்டு வனவிலங்குகள் அவ்வப்போது வெளியேறி குடியிருப்புப்பகுதிக்குள் வந்துபோவது வழக்கம். இந்நிலையில் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வரட்டுப்பாறை பகுதியில் உசேன் என்பவரின் தேநீர் கடையின் பின்புறம் கோழி வளர்ப்புக்கூண்டில் கால்கள் சிக்கிய நிலையில் சிறுத்தைப்புலி ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைக்கப் பெற்றது. சம்பவ இடத்திற்குச் சென்ற வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் சிறுத்தை உயிரிழந்ததை உறுதி செய்தார். அதனைத்தொடர்ந்து துணை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிறுத்தையின் நகங்களும் பற்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருப்பதாலும், உடலில் காயங்கள் ஏதும் இல்லாமல் இருப்பதாலும் சிறுத்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகத்துடன் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் உத்தரவின்பேரில் உயிரிழந்த சிறுத்தைக்கு உடற்கூறு ஆய்வுசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடற்கூறு ஆய்வுக்கு பிறகே சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM