’விஜய் 66’ படத்தின் பாடல்களை சூப்பர் ஹிட் பாடல்களாக ஆக்காமல் விடமாட்டேன்” என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர் தமன்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் ‘விஜய் 66’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கின் முன்னணி இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கிய ‘விஜய் 66’ படப்பிடிப்பு குடும்பக் கதையாக உருவாகி வருகிறது. முக்கிய கதாபாத்திரங்களில் ஷாம் மற்றும் நடிகர் சரத்குமார், பிரபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023 ஆம் ஆண்டு பொங்கலையொட்டி ‘விஜய் 66’ படத்தை வெளியிடவுள்ளது படக்குழு.
இந்த நிலையில், இப்படத்தில் பணியாற்றுவது குறித்து ஊடகம் ஒன்றிற்கு மனம் திறந்துள்ளார் இசையமைப்பாளர் தமன். “விஜய் 66 படத்தில் 6 பாடல்கள் உள்ளன. விஜய் சாரின் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி மனதைக் கவரும் படம். கதையைக் கேட்டவுடனேயே விஜய் சார் என்ன ஒரு அற்புதமான கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று நினைத்தேன். அப்படியொரு கதை.விஜய் சாரைப் பற்றி நான் எவ்வளவு உயர்வாக நினைக்கிறேனோ அது பாடல்களில் வெளிப்படும். ’விஜய் 66’ படத்தின் பாடல்களை சூப்பர் ஹிட் பாடல்களாக ஆக்காமல் நான் விடமாட்டேன்” என்று உற்சாகமுடன் கூறியுள்ளார். தமன் இசையில் மகேஷ் பாபுவின் ‘சர்காரு வாரி பாட்டா’ இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.