வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதுவை முன்னாள் துணைநிலை கவர்னர் கிரண் பேடி, சினிமா கிராபிக் காட்சி ஒன்றை நேஷனல் ஜியாகிரபிக் சேனல் படம் பிடித்த உண்மைக் காட்சி என சிலிர்த்துப் போய் ஷேர் செய்தார். பின்னர் அது போலி என தெரிந்ததும், வேறொரு பதிவு போட்டு சமாளித்தார்.
சமூக ஊடகங்களில் செய்தி, வீடியோ, புகைப்படம் போன்றவற்றை உறுதி செய்யாமல் அனுமதிப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான போலி செய்திகள் உலாவருகின்றன. அதில் சர்ச்சைக்குள்ளாகி புகாரளிக்கப்படும் விஷயங்களை மட்டும் சமூக ஊடக நிறுவனங்கள் விசாரணை செய்து நீக்குகின்றன. மற்றவை அப்படியே இருக்கின்றன. முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடியே அது போன்ற ஒரு போலி வீடியோவை பார்த்து ஏமாந்துள்ளார். ஏமாந்தது மட்டுமின்றி அதனை தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் ஷேர் செய்ததால் கிண்டலுக்குள்ளானார்.
அவர் பகிர்ந்த வீடியோவில் ”இந்த அரிதான வீடியோவுக்காக நேஷனல் ஜியாகிரபிக் சேனல் 7 கோடி ரூபாய் தந்துள்ளது.” என கூறப்பட்டுள்ளது. அதில் கடல் மீது பல அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரை ராட்சத மீன் எம்பி பிடித்துக்கொண்டு கடலுக்குள் செல்வதாக உள்ளது. படகில் அருகிலுள்ளவர்கள் அதனைக் கண்டு அச்சத்தில் நடுங்குகின்றனர்.
சினிமா காட்சியான இதனை விஷமிகள் மாற்றி பரப்பியுள்ளனர். அது தெரியாமல் உண்மை என ஷேர் செய்துவிட்டார் கிரண் பேடி. பின்னர் பலரும் சொன்னதும், ‘எப்படி இருந்தாலும் இது பயங்கரமானதாக இருக்கிறது. இதன் உண்மைத்தன்மைய ஆராய வேண்டும்.’ என கூறி சமாளித்துள்ளார்.
பதிலுக்கு சுறா தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஹாலிவுட் பட காட்சிகளை பகிர்ந்து கிரண் பேடியை, இது மிகவும் ‘ஆபத்தானதாக இருக்கிறது’, ‘அது நம்மை நோக்கி வருகிறது’, ‘எச்சரிக்கையோடு பாருங்கள்’ என கிண்டலாக கமெண்ட் அடித்து வருகின்றனர் இணையவாசிகள். ஆனாலும் அவர் அந்த வீடியோவை நீக்கவில்லை.
Advertisement