ஃபதேஹாபாத்,
அரியானா மாநிலம் ஃபதேஹாபாத்தைச் சேர்ந்த, பெயிண்டர் தொழில் செய்யும் ஒருவருக்கு, ரூ. 2.5 லட்சம் ரூபாய் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு வெறும் 300 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் பிரேம் குமார் என்ற அந்த நபர், ஆறு மாதத்திற்கு செலுத்த வேண்டிய மின்கட்டணமாக ரூ.2.5 லட்சம் விதிக்கப்பட்டதை அறிந்து கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.
மேலும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், பிரேம் குமாரின் குடும்பத்தினர் 2 மின்விசிறிகள் மற்றும் 2 பல்புகள் மட்டுமே கொண்ட குடிசை வீட்டில் வசிக்கின்றனர். இந்த நிலையில் ரூ. 2.5 லட்சம் மின்கட்டணத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து உள்ளூர் மின்சார அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் மின்கட்டணத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து பிரேம் குமார், முதல்வர் சாளரத்தில், குறை தீர்க்கும் அமைப்பில் புகார் அளித்துள்ளார். மேலும், மின் கட்டணத்தை சரி செய்ய மின்சாரத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், மின்சாரத்துறை அமைச்சர் ரஞ்சீத் சவுதலாவை அணுக உள்ளார்.
இதுகுறித்து மின்துறை துணை கோட்ட அலுவலர் கூறுகையில், வீட்டின் மின்நுகர்வை ஒப்பிடும்போது மின்கட்டணம் அதிகமாக உள்ளது. மின்கட்டணம் அதிகமானதற்கான காரணத்தை கண்டறிய முயற்சி செய்து வருகிறோம். தற்போதைய மின்கட்டணம் மின்மீட்டரில் உள்ள அளவின்படி விதிக்கப்பட்டுள்ளது. மின்மீட்டரை ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும். அதன்பிறகு சரியான பில் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.