திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பெருங்கருணை நாயகி உடன்மர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பும் பெற்றுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை தேரோட்டம் வெகு பிரசித்தம். இந்த தேருக்கு தமிழகத்தின் 3வது பெரிய தேர் என்ற சிறப்பும் உண்டு.
கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. தற்போது சகஜ நிலை திரும்பியதால் இந்த ஆண்டு கடந்த 5ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது. 9ந்தேதி இரவு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடந்தது.
10ந்தேதி மாலை கற்பகவிருட்ச விழா, இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி, யானை வாகன காட்சிகள் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து நேற்று 11ந் தேதி காலை 6 மணிக்கு அதிர்வேட்டு, மேளதாளம் மற்றும் பஞ்சகவ்யங்கள் ஒலிக்க பெரிய தேரில் சோமஸ்கந்தர் உமாமகேஸ்வரியும், சிறிய தேரில் கருணாம்பிகை அம்மனும் எழுந்தருளினர். பின்னர் ஏராளமான பக்தர்கள் ரதத்தின் மேல் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு பெரிய தேர்வடம்பிடித்து இழுக்கப்பட்டது. தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை,ஈரோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு நிறுத்தப்படுகிறது. பின்னர் நாளை 13ந் தேதி காலை 8 மணிக்கு மீண்டும் திருத்தேர் வடம்பிடித்து இழுத்து நிலை சேர்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் 14ந் தேதி காலை 8 மணிக்கு அம்மன் தேர் வடம்பிடித்து இழுத்து நிலை சேர்க்கப்படுகிறது. 15ந் தேதி வண்டித்தாரை நிகழ்ச்சி நடக்கிறது. 16ந் தேதி மாலை 6 மணிக்கு தெப்பத்தேர்விழா, 17ந் தேதி நடராஜர் தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. 18ந் தேதி மஞ்சள் நீர் விழா மற்றும் மயில்வாகன காட்சி நடைபெறுகின்றன.
தஞ்சை களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் மடத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அவினாசியில் நடைபெறும் தேரோட்ட விழாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 2ஆண்டு இடைவெளிக்கு பின் தேரோட்டம் நடந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.
இதையும் படிக்கலாம்…
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பரிகார பூஜை